தெருவோரத்தில் கிடந்த மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்த இளைஞர்! - நெகிழ்ச்சி சம்பவம்

 

ஆதரவற்று, உடல் மெலிந்து பிளாட்பாரத்தில் ரொம்ப நாளாகப் படுத்துக்கிடந்த மூதாட்டியை 'இணைந்த கைகள்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். 

கரூர் 80 அடி சாலை சந்திப்பு அருகே, சுயநினைவு இல்லாமல் ஒரு மூதாட்டி படுத்துக்கிடந்திருக்கிறார். ரொம்ப நாளாக அங்கேயே படுத்துக் கிடந்த அவர், சாப்பிடாமல், உடல் நலம் குன்றிப்போய் சுயநினைவு இல்லாமல் கிடந்திருக்கிறார். அந்த வழியாகச் சென்ற பலர், அந்த மூதாட்டியை வெறும் இரக்கப் பார்வையோடு மட்டும் கடந்து போய்கொண்டிருக்க, அந்த வழியாக வந்த 'முகநூல் இணைந்த கைகள்' அமைப்பின் தலைவர் சாதிக் அலி பார்த்துவிட்டு பதறிப்போயிருக்கிறார்.

உடனே, அந்த மூதாட்டிக்கு டிபன், தண்ணீர் வாங்கிக்கொடுத்து சாப்பிட வைத்தார். கூடவே, ஒரு மருத்துவரை அழைத்து வந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கவைத்தார். அதன்பிறகு, மூதாட்டியைப் பற்றி விசாரித்தபோது, அவர் சின்னக்கோவிலூரைச் சேர்ந்த அன்னக்கிளி என்பது தெரிந்திருக்கிறது.

பிள்ளைகள் இருந்தும் இவரை வைத்துக்கொள்ள விருப்பபடாததால், நாடோடியாகத் திரிந்த அன்னக்கிளி, நடக்க முடியாமல் 80 அடி சாலை அருகே படுத்துக்கிடந்திருக்கிறார். 

தனது பாதுகாப்பில் அவரை வைத்துக்கொண்ட சாதிக் அலி, அந்த மூதாட்டியைப் பற்றி முகநூலில் பதிவு போட்டு, 'இவரை யாராவது ஒரு காப்பகம் தத்தெடெடுத்தால் புண்ணியமாகப் போகும்' என்று கேட்டிருக்கிறார். அந்தத் தகவல், சமூக வலைதளங்களில் உலா வர, கரூரில் இயங்கும் அன்புக்கரங்கள் கவனத்திற்குச் சென்றிருக்கிறது.  அவர்கள், தங்கள் காப்பகத்தில் வைத்து அன்னக்கிளியைப் பராமரிப்பதாகச் சொல்ல, சாதிக் அலிக்கு சந்தோஷம் பிறந்திருக்கிறது. உடனே, அன்புக்கரங்கள் அமைப்பினர் விரைந்து வந்து, அன்னக்கிளிக்கு சாப்பாடு, சிகிச்சை உள்ளிட்டவற்றைச் செய்து, ஆம்னியில் ஏற்றிச் சென்றனர். அப்போது அன்னக்கிளி, சாதிக் அலியை கண்கள் கலங்க கும்பிட்டபடி ஒரு நன்றிப் பார்வை பார்த்துவிட்டு புறப்பட்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!