"அண்ணனை ஏமாத்திட்டாங்க!"- மாஃபா பாண்டியராஜன் ஆதரவாளர்கள் புலம்பல்

                         மந்திரிகள்

.பன்னீர்செல்வம் ஆதரவு மந்திரியான மாஃபா பாண்டியராஜன் தரப்பு புலம்பல்தான் இப்போது கோட்டை வட்டாரத்தில் அதிகமாய்க் கேட்கிறது. மாஃபா பாண்டியராஜன் தரப்பு ஆதரவாளர்கள், புலம்பலின் பின்னணியை விவரிக்கின்றனர். "ஜெயலலிதா  மந்திரி சபையிலேயே, மாஃபா பாண்டியராஜன் மந்திரியாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும், ஓ.பி.எஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி மந்திரிசபையில் இடம் பெறாமல், மந்திரி பதவியை  மாஃபா ராஜினாமா செய்தார். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். அணிகள் இணைப்புக்குப் பின், மீண்டும் அவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த முறை மாஃபாவுக்கு முன்பிருந்த 22-வது இடத்துக்குப் பதில்  29-வது இடம் கொடுக்கப்பட்டது. எடப்பாடி  மந்திரி சபையில் மாஃபா இடம் பெற்றாலும், அவருக்கான  முந்தைய அங்கீகாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. அதுபோக,  நிர்வாகத்துறை, தொல்லியல்துறை, ஜி.எஸ்.டி கவுன்சில் போன்றவற்றைக் கொடுப்பதாகச் சொல்லித்தான்  மந்திரிசபைக்கு மாஃபாவை   எடப்பாடி அழைத்தார். அப்படி அழைத்தவர், கடைசி நேரத்தில் ஜி.எஸ்.டி.கவுன்சில், நிர்வாகத்துறை போன்ற முக்கியமானவற்றைக் கொடுக்காமல் மௌனம் சாதித்தார்.

                      மந்திரி மாஃபா பாண்டியராஜன்

 மாஃபா தரப்பில் இதுபற்றிப் பேசும் போதெல்லாம், '18 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு, பார்த்துக் கொள்ளலாம்'  என்று தட்டிக்கழித்தார். இன்றுவரை, மாஃபா வுக்கு அதே  நிலைதான் நீடிக்கிறது. மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.ஹெச். பாண்டியன் போன்றோருக்கும் அதே நிலைதான்.  ஓ.பி.எஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஈ.பி.எஸ் ஆள்களே அதிகாரம் செய்கிறார்கள். இன்னமும் டி.டி.வி. தினகரன் தரப்பு ஆள்களோடு பகைமை பாராட்டாமல், ஈ.பி.எஸ். ஆள்கள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.  டி.டி.வி. தினகரனை எதிர்ப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துவிட்டு அவர்களுக்குள்  ரகசியப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது என்கிறார்கள். டி.டி.வி. அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அ.தி.மு.க, ஈ.பி.எஸ் அ.தி.மு.க. என்று அடிமட்டத் தொண்டனின் கண்ணுக்கு இப்போது மூன்று அ.தி.மு.க தான் தெரிகிறது' என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!