வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (22/02/2018)

கடைசி தொடர்பு:09:44 (22/02/2018)

மக்கள் நீதி மய்யம்: மதுரையில் உலாவிய போயஸ் உளவாளிகள் #VikatanExclusive


“மக்கள் நீதி மய்யம்” கட்சியை  மதுரையில் கோலகலமாகத் துவக்கிவிட்டார் கமல்ஹாசன்.பிரமாண்ட மேடை, புதுமையான வடிவில் கொடி, வித்தியாசமான  பெயர் என ஒவ்வொரு  விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை உளவு பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் தங்கியிருந்து முழு நிகழ்வையும் சென்னைக்கு அனுப்பியதுதான் சுவாரசியம்.

மக்கள் நீதி மய்யம்

தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக்  கலைத்துறையின்  ஆளுமை சக்திகளாக விளங்கிய ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரிதாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.இருவரும்  அரசியலில்  என்ட்ரி என அறிவித்தபோதே, தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும்  வரத்துவங்கிவிட்டன. குறிப்பாக ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரிக்கு கூடுதலாகவே எதிர்ப்புகள் கிளம்பின.ஆனால், இதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இருவரும் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக இருந்தனர். இதில் ரஜினியை முந்திக்கொண்டு கமல் கட்சி துவங்கும் நாளும் இடத்தையும் முதலிலே அறிவித்துவிட்டார். ஆனால்,அரசியல் களத்தில் இறங்குவதாக அறிவித்த  ரஜினி சட்டசபை தேர்தலுக்கு முன்தான் கட்சியைத் துவங்குவேன் என்றும் அதுவரை உறுப்பினர் சேரக்கை மன்றத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். 

கமல் ஒருபுறம் கட்சி துவக்க விழாவிற்கான வேலைகளை தீவிரப்படுத்தி வந்த நேரத்தில் ரஜினி  மாவட்ட வாரியாக ரசிகர் மன்ற பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார்.மேலும் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. கமலோ, கட்சி துவங்குவதற்கான  அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாகச் செய்து கட்சியின் பெயர், கொடி என அனைத்தையும் வடிவமைத்தார். அதே நேரம் ரஜினியின் செயல்பாடு மிதமாகவே இருந்துவந்தது.  ரஜினி தனது மன்றத்தின்  நிர்வாகிகளை வரிசையாக அறிவிக்க ஆரம்பித்தார்.அதே நேரத்தில் கமல்ஹாசனின் ஒவ்வொரு நிகழ்வையும் ரஜினியின் தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன் சந்தித்தபோது “தமிழகத்திற்கு நல்லது செய்யவும், மக்களுக்கு நல்லது செய்யவும் வந்துள்ளார். கமலுக்கு எல்லா ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அவர் அனைத்துப் பயணத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துத் தெரிவித்தேன்.சினிமாவில் எனது பாணி வேறு அவரது பாணி வேறு. அதேபோல் அரசியலிலும் வேறு வேறாக இருக்கும். ஆனால், மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம்” என்று என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு என்பதை அப்போதே சொல்லிவிட்டார் ரஜினி்.

ரஜினி - கமல்

கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரிக்கு ஒருபுறம் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தாலும், மறுபுறம் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள். குறிப்பாக இத்தனை ஆண்டுகள் நட்பாகப் பழகியவர் கட்சி துவங்கும் நேரத்தில் தானும் கட்சி துவங்கி இருவரும் எதிர் எதிர் அணியில் நிற்கின்ற சூழ்நிலை வந்துவிடப்போகிறது என்று ரஜினி வருத்தப்பட்டுள்ளார். இருந்தாலும், கமலின் அரசியல் என்ட்ரியைவிட தனது அரசியல் என்ட்ரி மாஸாக இருக்க வேண்டும் என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். முதல் கூட்டத்திலே நமது பலத்தைக் காட்டிவிட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் “ ஒரு கோடி உறுப்பினர்கள் இணைந்தபிறகுதான் கட்சி துவங்க வேண்டும் என்று முடிவில் ஆரம்பத்தில் இருந்தார் ரஜினி. ஆனால், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை கமலின் அரசியல் என்ட்ரி இரண்டையும் மனதில் வைத்து விரைவிலே கட்சியை முறைப்படி துவங்கும் முடிவுக்கு வந்துவிட்டார் ரஜினி்.முதலில் ரஜினி கட்சி துவங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் மதுரைதான். ஆனால், கமல் கட்சித் துவக்க விழா அழைப்பை ரஜினியிடம் கொடுக்க வரும்போது மதுரையில் தனது கட்சித் துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்க இருப்பதைச் சொன்னதும் ரஜினி தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். 

மதுரையில் கமல் துவங்கட்டும், திருச்சியில் நமது கட்சித் துவக்கவிழாவை நடத்தலாம் என்று முடிவுக்கு அவர் வந்துள்ளார். மேலும், கமலின் ஒவ்வொரு நிகழ்வினையும் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பார்த்து வருகிறார்கள். மதுரையில் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்தை ஆய்வு செய்வதற்கே, சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் முகாமிட்டிருந்தது. கமல் ரசிகர்களின் செயல்பாடுகள், பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் என அனைத்தையும் இந்த உளவுக் குழு குறிப்பெடுத்துள்ளது.இதற்கு மாற்றாகவே ரஜினியின் அரசியல் கட்சித் துவக்க விழா அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மதுராந்தகத்தில் உள்ள கல்லுாரி ஒன்றில் எம்.ஜி.ஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்க உள்ளார். அன்று சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் அவர். 

இராமேஸ்வரம் முதல் மதுரை வரை கமலின் அனைத்து நிகழ்வுகளையும் ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் ஒரு டீம் தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தது. இந்த அப்டேப்களை  ரஜினியும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார் ரஜினி. தமிழகத்தின் மூன்றாவது அரசியல் சக்தியாக யார் வரப்போகிறார்கள் என்று கமல், ரஜினி இடையே பனிப்போர் ஆரம்பமாகிவிட்டது. 


டிரெண்டிங் @ விகடன்