`அதிக உரமிட்டால் மண்வளம் என்னாகும்?' வேளாண் கல்லூரி முகாமில் விவசாயி சொன்ன அறிவுரை

'அதிக அளவு உரமிட்டு மண் வளத்தைக் குறைக்காமல், மண் மாதிரிகளைத் தேர்வுசெய்து மண்ஆய்வு செய்து பயிரிட வேண்டும்' என்று வேளாண்கல்லூரி முகாமில் விவசாயி அறிவுரை வழங்கினார்.


விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம்  குடுமியான்மலையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், கடந்த ஒருவாரமாக வயலோகம் என்ற கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் (22.02.2018.) நிறைவுபெறும் இந்த முகாமில், வயலோகம் கிராம விவசாயிகளுக்கு, மக்கும் உரம் நாமே தயாரிக்கும்  தொழில்நுட்பம், மண்வளம் பற்றிய விழிப்புஉணர்வு, கால்நடைகள் பராமரிப்பின் அவசியம். அதனால் ஏற்படும் நன்மைகள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயம் கற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போதைய ரசாயனமயமாகிவிட்ட வேளாண் தொழிலில், பயிர்களுக்கு இயற்கையான மக்கும் குப்பை எப்படி உயிர் உரப் பயன்பாடாக அமைகிறது என்ற அவசியம்குறித்தும் சொல்லப்பட்டது.

விவசாயி

பிறகு, மக்க வைக்கும் முறைகள் குறித்தும், உயிர் உரங்களுக்கு வங்கிகள் தரும் மானியம் குறித்தும், திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேம்பாடுகுறித்தும் நுட்பமாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் முன்னோடி இயற்கை விவசாயி முத்தையா கலந்து கொண்டு மக்கும் உரத் தொழில்நுட்பத்தில் தனது அனுபவங்களையும் தன்னுடைய பண்ணையில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயிர் உரச் செலவைக் குறைத்து லாபத்தைப் பெருக்கியது பற்றியும் விவரித்தார். மேலும், "மண்வளம், இயற்கை வேளாண்மை, கால்நடை பராமரிப்பு போன்ற விஷயங்களை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் பெரிய கடமை நமக்கு இருக்கிறது" என்றார்.


விவசாயி

மற்றொரு நாள் மண்வளம்குறித்து விழிப்புஉணர்வு வகுப்பு நடைபெற்றது. இயற்கை உரங்களினால் மண்ணுக்குள் நடக்கும் இயல்பான நன்மைகளையும், செயற்கை உரங்களினால் ஏற்படும் உபாதைகளையும் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டது. கூடவே, மண்ணில் எப்போதும் இருக்கவேண்டிய ஒருங்கிணைந்த சத்து மேம்பாடு, பயிர்க் கழிவுகளை மறுசுழற்சிசெய்து உரமாகப் பயன்படுத்திக் கொள்வது, பயிரின் தேவையை அறிந்தும் மண்ணின் தன்மையைக் கண்டறிந்தும், உரமிட்டால் மண்ணும் விளைச்சலும் மேம்படும் எனவும் அதிக அளவு உரமிட்டு மண் வளத்தைக் குறைக்காமல், மண் மாதிரிகளைத் தேர்வுசெய்து, மண்ணை ஆய்வுசெய்து பயிரிட வேண்டும் என்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் விவரித்தனர். வெறும் வகுப்புடன் நிறுத்திவிடாமல், அருகிலுள்ள அகரப்பட்டி கிராமத்துக்குச் சென்று மண் மாதிரிகளை எடுக்க செயல் விளக்கமும் அளித்தனர். அதுபோலவே, கால்நடை பராமரிப்பு முகாமும் நடைபெற்றது. இதில், வயலோகம் கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் கால்நடைகளுடன் கலந்துகொண்டனர். அவற்றுக்கு செயற்கை கருத்தரிப்பு , குடற்புழு நீக்கம் ஆகியவற்றுக்கான மருத்துவ உதவிகள் மற்றும் ஊட்டச்சத்துக் கலவைகள், ஒவ்வாமை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த ஏழுநாள் முகாமை, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த முகாம், இன்று மாலை நிறைவுபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!