வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (22/02/2018)

கடைசி தொடர்பு:14:03 (22/02/2018)

அம்ருதா யார்? - `ஜெயலலிதா மகள்' எனத் தொடர்ந்த வழக்கில் தீபா காட்டமாகப் பதில் மனு

அம்ருதா- தீபா

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜெ.தீபா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "கடந்த 14.8.1980 அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி சம்பிரதாய சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரின்சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீபக் அளித்த பதில் மனுவில், "என் அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா, ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளார். மோசடி பேர்விழி அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வைத்தியநாதன் நாளைக்கு ஒத்திவைத்தார்.