வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (22/02/2018)

கடைசி தொடர்பு:16:25 (22/02/2018)

சாலையில் சென்ற பெண்களைக் கதிகலங்க வைத்த ஏர்போர்ட் ஊழியர்! சிசிடிவி-யால் சிக்கினார்

ஜெயபிரகாஷ்

சென்னையில், தனியாக நடந்து செல்லும் பெண்களைக் கிண்டல் செய்த விமான நிலைய ஊழியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் சில பெண்கள், பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதில், கோட்டூர்புரம் பகுதியில் நடந்து செல்லும்போது 50 வயது மதிக்கதக்க ஒருவர், தங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிடுவதாகக் கூறியிருந்தனர். மேலும் தகாத வார்த்தைகளாலும் அவர் திட்டுகிறார். அவரது செயல்பாடுகளால் நாங்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுளோம் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதனால், அந்த நபர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரில் சுட்டிக்காட்டிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அத்துமீறியவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதோடு அவர் செய்த சேட்டைகளையும் கேமரா காட்டிக்கொடுத்தது. இதனால், அவரைப் போலீஸார் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில் பெண்களிடம் அத்துமீறிய நபர், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்றும் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், `பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தனியாக நடந்து சென்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு முத்தம் கொடுத்திருப்பதாகவும் கூறி போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. இதுவே அவர் தொடர்ந்து தவறு செய்வதற்கு வழிவகுத்துள்ளது. ஜெயபிரகாஷுக்குத் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். தற்போது, அவர் குறித்த முழுத்தகவல்களைப் போலீஸார் சேகரித்துவருகின்றனர். 

ஜெயபிரகாஷைப் போலீஸார் பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ஜெயபிரகாஷால் பாதிக்கப்பட்ட பெண்கள், தயங்கியபடி எங்களிடம் புகார் கொடுத்தனர். இதனால் அவர்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம். கோட்டூர்புரம் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அத்துமீறும் நபரைப் பொறி வைத்துப்பிடிக்கத் திட்டமிட்டோம். இதற்காக, புகாரில் குறிப்பிட்ட பகுதியில் சீருடையில்லாத போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஒருவர், தகாத வார்த்தையால் பேசியதோடு அவரது கையைப்பிடித்து இழுத்தார்.

இதைப் பார்த்த போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸாரைக் கண்டதும் அந்த நபர் பைக்கில் தப்பினார். போலீஸாரும் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது, போலீஸாரை அவர் தாக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், புகாரில் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்று தெரிந்தது. அவரைப் பிடிக்க சிசிடிவி கேமராவும் எங்களுக்கு துருப்புச் சீட்டாக இருந்தது. இதையடுத்து ஜெயபிரகாஷ்மீது பெண்களைக் கிண்டல் செய்வது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம், போலீஸாரைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஜெயபிரகாஷ்மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது" என்றார்.