கச்சத்தீவு திருவிழா நாளை தொடக்கம்! - 40 அடி கொடிமரம் காணிக்கை அளிக்கும் இந்திய பக்தர்கள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்கச் செல்லும் இந்திய பக்தர்கள் 40 அடி உயரம் தேக்குக் கொடிமரத்தைக் காணிக்கையாக வழங்க உள்ளனர்

கச்சத்தீவு ஆலயத்திற்கு வழங்க உள்ள 40 அடி நீள கொடி மரம்
 

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்திய மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளனர். இவ்விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 62 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,103 பக்தர்கள் செல்ல உள்ளனர். இதற்காக, சிறப்பு அனுமதிச் சீட்டு அரசு மற்றும் வேர்க்கோடு பங்கைச் சேர்ந்த கச்சத்தீவு ஆலய விழா கமிட்டியினரால் வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கச்சத்தீவுக்குப் பக்தர்களுடன் படகுகள் புறப்பட உள்ளன. கச்சத்தீவு செல்ல உள்ள பக்தர்கள் வருவாய்த்துறை, காவல்துறை, சுங்கத்துறை, புலனாய்வுப் பிரிவுகளின் சோதனைக்குப் பின் படகுகளில் அனுமதிக்கப்படுவர்.

மதுபானம், போதைப் பொருள்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கச்சத்தீவுக்கு எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குத் தமிழக பக்தர்களின் காணிக்கையாக 40 அடி உயரமுள்ள தேக்குக் கொடிமரம் வழங்கப்பட உள்ளது. சுமார் 2,00,000 மதிப்புடைய இந்தக் கொடிமரம் நாளை காலை படகு மூலம் கச்சத்தீவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மாலையில் நடைபெறும் திருவிழாவுக்கான கொடி இதில் ஏற்றப்படும். இது தவிர சுமார் 4 அடி உயரம் உடைய புனித அந்தோணியார் சிலையும் நற்கருணை ஆசீர் வழங்கக்கூடிய கதிர் பாத்திரமும் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைக் கச்சத்தீவு பயண ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் பங்குதந்தை அந்தோணிச்சாமி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!