`குழந்தையைத் தூக்கும்போது அங்கே ஏன் கை உரசுகிறது?' #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

"கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல். 

என் மகன் அப்போது கைக்குழந்தை. சாயங்கால நேரங்களில் சாலையில் நின்று அவனுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும்போது பக்கத்துவீட்டுப் பெரியவர் வந்து என் குழந்தையைச் சற்று நேரம் தூக்கிவைத்திருந்துவிட்டு, கொஞ்சிப் பேசிவிட்டுச் செல்வார். 'பேரன் என்னம்மா மெலிஞ்சு போயிட்டான்' என்பதுபோன்ற பேச்சும் விசாரிப்பும், அவர்மீது எனக்கு எந்தச் சந்தேகத்தையும் தரவில்லை.

கிழவன்

குழந்தையை அவர் என்னிடமிருந்து வாங்கும்போது அவர் கைகள் என் மார்பில் உரசும். என்றாலும்கூட, `பெரியவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார், தெரியாம பட்டிருக்கும்' என்றுதான் முதலில் என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இது தவறாமல் நிகழவே, எனக்குள் அவஸ்தை உண்டானது. அவர் குழந்தையைக் கொஞ்ச வரவில்லை, குழந்தையை வாங்கும் சாக்கில் என் மார்பை உரசவே வருகிறார் என்பது ஒரு கட்டத்தில் எனக்கு அப்பட்டமாகப் புரிந்துவிட்டது. அதனால், அவர் வருவதைக் கண்டாலே குழந்தையை வாக்கரில் வைத்துவிட ஆரம்பித்தேன். ஆனால் அவரோ வாக்கரில் இருந்து குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, மீண்டும் அவனை என்னிடம் கொடுக்கும் சாக்கில் அதே வக்கிரத்தைச் செய்தார். அன்று... அவர் குழந்தையைத் தூக்கவந்தபோது, 'கெழட்டு நாயே, கையை உடைச்சிடுவேன். இன்னைக்கு உன் மருமககிட்ட வந்து உன் யோக்கியதையைச் சொல்றேன் பாரு' என்றேன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். குட்டக் குட்டக் குனிவேன் என்று நினைத்தவனின் முகம், பேயறைந்தாற்போல ஆனது. அன்று முதல் விட்டது அவன் தொல்லை.   

Speak-Up

உங்கள் குரலைப் பதிவு செய்ய http://bit.ly/vikatanspeakup

Do you like the story?

Please Appreciate the Author by clapping!