வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (22/02/2018)

கடைசி தொடர்பு:19:33 (22/02/2018)

80 கோடி... குந்தா நீர் மின் திட்டத்தில் ஊழல்..? - 'ஷாக்’ பின்னணி

தலைமைச் செயலகம்

''அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது'' என்று கொந்தளித்துக்கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' எனும் புதியக் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இதேவேளை, அ.தி.மு.க ஆட்சியாளர்களை நோக்கி 'குந்தா நீர் மின்தேக்கத் திட்டத்தில் மெகா ஊழல்' என்ற அடுத்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்துப் பேசும் கோட்டை வட்டார முக்கியப் புள்ளிகள், ''நீலகிரி மாவட்டத்தில் உள்ள 'குந்தா நீர்த்தேக்க'த்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 2016 ம் ஆண்டு புதிதாக 'குந்தா பவர் ப்ராஜெக்ட்' (Kundah Pumped Storage Hydro Electric Projet), என்ற பெயரில் புதிய மின் தயாரிப்புத் திட்டப் பணிகளுக்கான திட்டம் தீட்டப்பட்டது. இதையடுத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலாக திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டரும் விடப்பட்டது. 

ஏற்கெனவே இத்துறையில் அனுபவம் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்துகொண்டன. ஆனாலும்கூட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் தலையீட்டால், இத்துறையில் அனுபவமே இல்லாத கம்பெனிக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று கோடிட்டுக் காட்டினர்.

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

'முறைப்படி ஒப்பந்தப் புள்ளி கோரி நடைபெறும் திட்டத்தில் ஊழல் எப்படி சாத்தியம்?' என்ற நமது கேள்விக்கு விடைகூறும் ஒப்பந்ததாரர்கள், ''டெண்டரின்போது பெரிய கம்பெனிகள் அனைத்துமே, திட்டத்தை செயல்படுத்துவதற்கான தங்களது ஒப்பந்தத் தொகையை சீலிட்டக் கவர்களில் குறிப்பிட்டு, அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிடுவார்கள். யார், என்ன தொகை குறிப்பிட்டுள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாது. டெண்டர் ஓப்பன் செய்யும் நாளன்றுதான் தொகை விவரங்கள் தெரியவரும். அவற்றில், மிகக் குறைவான ஒப்பந்தத் தொகையைக் குறிப்பிட்டிருக்கும் நிறுவனத்துக்குத்தான் முறைப்படி டெண்டர் விடப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், மின்சாரத்துறை சம்பந்தப்பட்டப் பணிகளுக்காக நடைபெறும் டெண்டர்களில், முறைகேடுகள் நடைபெறுகின்றன. முறையாக டெண்டரை ஓப்பன் செய்வதற்கு முன்பாகவே, திருட்டுத்தனமாக டெண்டர் பாக்ஸை ஓப்பன் செய்து, எந்தக் கம்பெனி மிகக் குறைவான ஒப்பந்தத் தொகையைக் குறிப்பிட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். பின்னர் அந்தத் தொகையைவிடவும் குறைவானதொரு தொகையைக் குறிப்பிட்டுத் தருமாறு தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திடம் கேட்டு வாங்கி டெண்டர் பாக்ஸில் சேர்த்துவிடுகிறார்கள்'' என்று ரகசியம் உடைக்கின்றனர்.

மேலும் இவ்விவகாரம் குறித்துப் பேசும் விவரப் புள்ளிகள் சிலர், ''அரசுத் துறையில் எல்லாமே கண்துடைப்புதான். அதிலும் டெண்டர் விஷயங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது சகஜமான ஒன்றுதான். டெண்டர் எடுக்கும் எல்லோருமே, சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த முக்கிய அதிகாரிகளிலிருந்து அமைச்சர் வரையில் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகத் தரவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

குந்தா ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்டிலும் இப்படிப்பட்ட தகிடுதத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற பெரிய அளவிலான திட்டங்களை எடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் வேலைகள் குறித்த முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்த விதிகளின் அடிப்படை. 'குந்தா பவர் ப்ராஜெக்ட்'டிலும் இதுபோன்ற விதிமுறைகள் முதலில் அறிவிக்கப்பட்டன. ஆனால், டெண்டர் ஓப்பன் செய்யும் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக அவசரம் அவசரமாக சில நிபந்தனைகளில் திருத்தம் செய்து தங்களுக்கு வேண்டிய நிறுவனத்தை உள்ளே கொண்டுவந்ததோடு அவர்களுக்கே டெண்டரையும் கொடுத்துவிட்டார்கள். மேலும், திட்ட மதிப்பீட்டிலும் சிலபல காரணங்களைச் சொல்லி 80 கோடி ரூபாய்க்கும் மேலாக உயர்த்திவிட்டார்கள். 

அமைச்சர் தங்கமணி

இந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்ட கம்பெனிகள், தற்போது இந்த முறைகேடுகள் குறித்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுத்துள்ளன. ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவருவதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆணையை வழங்கிவிட்டனர்'' என்கின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலில்,  இவ்விவகாரம் மத்திய உளவுத்துறை மற்றும் சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷனின் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவருவதாகவும் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டோம்... ''நீங்கள் கூறுவதுபோல், குந்தா பவர் திட்டத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. டெண்டர் கிடைக்காததால் பொய்யானக் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எல்லாமே முறைப்படி நடந்துள்ளதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்