`ஊழியத்தைவிட அதிபர் பதவி பெரிதல்ல!' - மறைந்தார் மத போதகர் பில்லி கிரஹாம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கிறிஸ்துவ மார்க்க போதகர் பில்லி கிரஹாம் (99) நேற்று மறைந்தார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.

பில்லி கிரஹாம்

அமெரிக்க வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல நற்செய்தியாளர் பில்லி கிரஹாம். 1918-ம் வருடம் நவம்பர் 7-ம் தேதி பிறந்த இவர், 2018-ம் வருடம் பிப்ரவரி 21-ம் தேதியான நேற்று மறைந்தார். இவரின் மனைவி ரூத் கிரஹாம் 2007-ம் வருடம் மறைந்தார். இவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். பல அமெரிக்க அதிபர்களுக்கும் மற்ற தேசத் தலைவர்களுக்கும் கிறிஸ்துவ மார்க்க  ஆலோசனையாளராக இருந்திருக்கிறார். இவர் தனது இறுதி மூச்சுவரை யேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கம் செய்து வந்தார். இதுவரை 21.5 கோடி மக்களுக்கு 185 நாடுகளில் தன்னுடைய கணீர் குரலால் சுவிஷேசம் அறிவித்திருக்கிறார். பல கோடி ஆத்மாக்களை கர்த்தரிடத்தில் சேர்த்தவர். பெரும் ஆத்ம அறுவடைக்காரர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியம் செய்தவர். இவர் எழுதிய ஆவிக்குரிய நூல்கள் விற்பனையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.

சாவின் விளிம்பில் நின்ற பல லட்சக்கணக்கான மக்களுக்கு மறு வாழ்வை இவரது நூல்களும் நற்செய்திக் கூட்டங்களும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. பில்லி கிரஹாம் தன்னை எப்போதுமே உலகப் புகழ் பெற்ற ஊழியக்காரராக முன்னிலைப் படுத்திக்கொள்ளாதவர். எப்போதும் தன்னைத் தாழ்த்தி, கிறிஸ்துவை உயர்த்தி ஊழியம் செய்தவர். இவரைத் தேடி அமெரிக்க அதிபர் பதவி வந்தபோதும் அதை வேண்டாம் என நிராகரித்து, என் பணி கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே என்று வைராக்கியம் காட்டியவர். "இந்த உலகில் மிகப்பெரிய கவுரவம், பதவி எல்லாமே கர்த்தருக்கு ஊழியம் செய்வதுதான்" என்று  தனது கூட்டங்களில் வலியுறுத்திச் சொன்னவர். அவர் விட்டுச் சென்ற பெரும்  ஊழியத்தை அவரின் மகன் Bro.Franklin Graham இன்னும் வல்லமையாய் செய்ய வேண்டும் என்று தற்போது அமெரிக்க மக்கள் விரும்பி, அதற்கான ஜெப அழைப்புகளை இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். 'The_Bible_says' என்ற வார்த்தை முதன்முதலாகப் பில்லி கிரஹாமால்தான் சொல்லப்பட்டது. இவர் கொடுக்கும் செய்திகள் அநேக முறை அமெரிக்கத் தேசத்துக்குக் கடுமையான எச்சரிப்பின் குரலாகத்தான் இருந்தது. இவருடைய நற்செய்தி கூட்டங்களில் அற்புதங்கள் இருக்காது. அடையாளங்கள் இருக்காது. ஆட்டம் பாட்டம் ஆரவாரங்கள் இருக்காது. ஆனாலும், லட்சக்கணக்கானோர் கூடினர். யேசுவின் அன்பை லட்சக்கணக்கானோருக்கு அறிவித்த, கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்திய ஒரு மாபெரும் தேவ மனிதராக அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை கிறிஸ்துவ மக்களும் கருதினார்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!