வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (22/02/2018)

கடைசி தொடர்பு:18:40 (22/02/2018)

இடைத்தரகர்களின் கைகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்! கொந்தளிக்கும் விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது மேல்மங்களம். இங்கே தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் நெல்லை, அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து நியாயமான விலை கொடுக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டதே இந்த நெல் கொள்முதல் நிலையம். ஆனால், தற்போது, இடைத்தரகர்களின் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

நெல் கொள்முதல் நிலையம்- விவசாயிகள்

இந்நிலையில், இன்று காலை, நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் செயலைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய விவசாயிகள், ''நெல் கொள்முதல் நிலையத்துக்கு வரும் விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் 870 ரூபாய்க்கு வாங்கும் இடைத்தரகர்கள், அந்த நெல்லை 1,030 ரூபாய்க்கு கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். இடைத்தரகர்களை மீறி நேரடியாக அதிகாரிகளிடம் சென்றால் அதிகாரிகள் எங்களிடம் நெல்லை வாங்குவதில்லை. ஏனென்றால் இடைத்தரகர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாகச் செயல்படுகிறார்கள். விளைவிக்கப்படும் நெல்லுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைக் கொண்டுவந்தது. ஆனால், இன்று அதுவும் இடைத்தரகர்களின் கைகளில் சிக்கி, எங்கள் கழுத்தை அழுத்துகிறது. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது'' என்று சொல்லி வேதனை தெரிவித்தனர் விவசாயிகள்.