வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (22/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (22/02/2018)

`கமலால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பு இல்லை!' - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

”திராவிடம் முடிந்துபோன சரித்திரம். கமல் தனிக்கட்சித் தொடங்கியுள்ளதால் எந்தக் கட்சிக்கும் பாதிப்பு இல்லை” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பொ.ராதாகிருஷ்ணன், “யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இவை இரண்டும் இந்தியக் குடிமகனின் உரிமைகள். புதிதாகத் தனிக்கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரை அவர் சந்தித்துள்ளதை வைத்துப்பார்த்தால், அவர் அகில இந்திய அரசியலில் ஈடுபடுவாரா என்பது, இனி வரும் காலங்களில்தான் தெரியும். கமல் தனிக்கட்சித் தொடங்கியுள்ளதால்  எந்தக் கட்சிக்கும் பாதிப்பு இல்லை. திராவிட அரசியலில் ஈடுபடுவேன் என இனி யாரும் சொல்லி ஏமாற்றிவிட முடியாது. இந்தியாவின் ஒரு பகுதிதான் திராவிடம். திராவிடம் ஒரு முடிந்துபோன சரித்திரம். ஏனென்றால், இனி தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் எடுபடாது.

பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களைத் தொடங்கியபோது மீன்பிடித் தொழில் பாதிக்கும் என்றுதான் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்துறைமுகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இதனாலும் மீன்பிடித்தொழிலுக்குப் பாதிப்பும் இருக்காது. தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் வந்துவிடக் கூடாது என சிலர் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்களுக்கு நன்மையான திட்டத்தை மட்டுமே பா.ஜ.க செயல்படுத்தி வருகிறது. முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தபோது, குமரி முதல் சென்னை வரையிலான கிழக்கு கடற்கரையில் நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்து பேசியுள்ளேன். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் நேர்மறையான எண்ணத்தில்தான் பேசினார். விரைவில் இந்த நால்வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்று கூறினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க