வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (22/02/2018)

முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்திக்க முடிவு..!

முதலமைச்சர் தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாயச் சங்கத் தலைவர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அனைக்க வலியுறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்தத் தீர்மானங்கள், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை ஆறு வார காலத்துக்குள் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

தமிழ்நாட்டு காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.74 டி.எம்.சி அடி நீரைக் குறைத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, அனைத்துக்கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாயச் சங்கத் தலைவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.