பள்ளி டார்ச்சர் தாங்காமல் விஷம் குடித்த ஐந்து மாணவிகள்..!

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள பி.கே.என் பள்ளியில் ஐந்து பள்ளி மாணவிகள் விஷம் குடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமங்கலம் பிகேஎன் பள்ளி

திருமங்கலத்திலுள்ள பிரபலமான பி.கே.என் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் பள்ளியில் விஷம் குடித்த சம்பவமும், மற்றொரு மாணவி வீட்டில் விஷம் குடித்த சம்பவமும் நேற்று நடந்தது. விஷம் குடித்த மாணவிகளுக்கு உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் அவர்கள் பெற்றோர்களிடம் அனுப்பவே வேகம் காட்டிய பள்ளி நிர்வாகத்தின் செயல் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, திருமங்கலத்தின் மிகவும் பிரபலமானதும், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பி.கே.என்.பள்ளியில் மாணவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாணவிகளை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதிலிருந்து தப்பிக்க நான்கு மாணவிகள் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்து மயங்கியுள்ளனர்.

இதை தெரிந்துகொண்ட பள்ளி நிர்வாகத்தினர், ஆபத்தான நிலையிலிருந்த  மாணவிகளை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், அவர்களின் பெற்றோர்களை போன் செய்து அழைத்து அவர்கள் மூலம், எழுதி வாங்கிக்கொண்டு மிக தாமதமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நான்கு மாணவிகளுக்குத் தோழியான மற்றொரு மாணவியும் வீட்டுக்குச் சென்று இதேபோல் எலி மருந்தை அருந்தி அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கமல்ஹாசன் மதுரை விசிட் அடித்த செய்தி பரபரப்பாக இருந்ததால், இந்தச் சம்பவத்தை பள்ளிக் கல்வித்துறை மூலம் அமுக்கப் பார்த்துள்ளது. எப்படியோ விசயம் வெளியே தெரிந்துவிட்டது, யாரிடமும் புகார் செய்யக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை மிரட்டியுள்ளது. தற்போது இந்த விவகாரம் பெரிய அளவில் பரவவே மாவட்ட ஆட்சியரும், சி.இ.ஓவும் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். காவல்துறையும் விசாரித்து வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் அதிகப்படியான டார்ச்சர்தான் காரணமென்று சொல்லப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள மாணவிகள் வாய் திறந்து பேசினால்தான் உண்மை வெளிவரும். டீன் ஏஜ் மாணவிகள் என்பதால் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். இப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகிறார்கள்,.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!