நடிகை ஶ்ரீவித்யா சொத்து ஏலம்..! வருமானவரித் துறை அதிரடி

கமல் ஶ்ரீவித்யா

நடிகை ஶ்ரீவித்யாவுக்குச் சொந்தமாகச் சென்னையில் உள்ள, 'பிளாட்' வருமானவரித் துறைமூலம் ஏல முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியத் திரை உலகில் 1966- ம் ஆண்டு முதல் 2000- ம் ஆண்டுவரை சுமார் 34 ஆண்டுகள் பிரபலமாக இருந்தவர் நடிகை ஶ்ரீவித்யா. அவர், 2006- ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரை கடைசியாக, நடிகர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ஶ்ரீவித்யா-வின் இறுதிக்காலத்தில் கேரளாவைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர்தான் கவனித்து வந்தார். அவர்தான், ஶ்ரீவித்யாவின் பாதுகாவலராக இருந்தார். அவர், கேரளக் காங்கிரஸ்(பி)  தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை என்பவரின் மகன். மலையாள திரைப்பட நடிகரும் ஆவார். கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். இப்போது, பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவருடைய பாதுகாப்பில்தான் ஶ்ரீவித்யா சொத்துகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை அபிராமபுரம் சுப்ரமணியபுரம் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஶ்ரீவித்யாவின் 1,250 சதுர அடி கொண்ட பிளாட், ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்றும், அதன் உத்தேச மதிப்பு ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் என்றும், குறைந்தபட்ச விலை நிர்ணயித்து வருமானவரித் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருமானவரித் துறை வரி மீட்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஶ்ரீவித்யாவிடமிருந்து வரவேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி மற்றும் ஏலச்செலவு தொகையை வசூல் செய்வதற்கு அவரின் மனை இடமும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டடமும் சென்னை வருமான வரி அலுவலக அரங்கத்தில் 12.3.18 அன்று முற்பகல் 11.30 மணிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!