விபத்தில் காயமடைந்தவரிடம் திருட்டை அரங்கேற்றிய ஆசாமிகள் ! | Gold chain theft in accident

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (23/02/2018)

கடைசி தொடர்பு:03:30 (23/02/2018)

விபத்தில் காயமடைந்தவரிடம் திருட்டை அரங்கேற்றிய ஆசாமிகள் !

விபத்தில் அடிபட்டு கீழே விழுந்தவரிடம் நகைகளை திருடிய ஆசாமியை திருப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக திருமுருகன்பூண்டி என்ற பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்குள் அமைந்திருக்கும் அம்மா உணவகம்  அருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார்.  தலையில் காயம் அடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கும் அண்ணாதுரை அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான மயக்க நிலையில் இருந்த அவர், பின் கண்விழித்துப் பார்த்தபோது, தன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினும்,  பின்னர் ஒரு பவுன் மோதிரமும் காணாமல்போனது தெரிய வந்திருக்கிறது. அப்போது பேருந்து நிலையம் அருகே விபத்து நேர்ந்தபோதுதான் யாரோ எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதிய அண்ணாதுரை, அது தொடர்பாக காவல்நிலையத்தை அணுகி புகார் மனு அளித்தார். பின்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.