வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/02/2018)

கடைசி தொடர்பு:10:30 (23/02/2018)

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் என்னதான் நடக்கிறது?- கொந்தளிக்கும் மாணவிகள்

தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வி சேவையாற்றி வருகிறது. தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற எழை எளிய மாணவிகளின் பட்டதாரி கனவுகளை இக்கல்லூரிதான் நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில்தான் சமீபகாலமாக இக்கல்லூரியின் நிர்வாக செயல்பாடுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென விடப்பட்ட ஒரு வார கால விடுமுறை, இதன் நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

College

 

கடந்த 17-ம் தேதி இக்கல்லூரியின் மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தையும் இதற்கான காரணங்களையும் வெளியில் கசியவிடாமல் கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றது. மாணவிகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினால் என்ன செய்வது என்ற அச்சத்தால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, கடந்த 19-ம் தேதி அறிவிப்புப் பலகையில் பிப்ரவரி 26-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு மாணவிகளும் பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவிகள், இங்கு நடக்கும் நிதி முறைகேடுகளை அடுக்கிக்கொண்டேபோனார்கள்.

`விடுதி மேற்கூரை இடிஞ்சு கிடக்கு. அடிப்படை வசதிகள் இல்லை. இதுமாதிரி இன்னும் ஏகப்பட்ட பிரச்னைகள். ஆனால் இதையெல்லாம் சொன்னால், கல்லூரி முதல்வர் திருவள்ளுவனுக்கு கோபம் வருது. அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுறாரு. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுத்த 2 கோடி ரூபாயை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தாமல், ஏ.சி. மிஷின்கள், நாப்கீன் தயாரிக்குற மிஷின்கள் வாங்கி, இதுல ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கு. கண்காணிப்புக் கேமராக்கள் வாங்கினதுலயும் முறைகேடுகள் நடந்திருக்கு. முறையான விசாரணை நடத்தினால் இன்னும் பல முறைகேடுகள் வெளியில வரும்” என ஆதங்கப்படுகிறார்கள். தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் விடுமுறை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.