பழங்குடி இன மக்களுக்காகப் போராடும் பட்டதாரிப் பெண்!

சொந்த மண்ணில் அகதிகளாக மாறி, வாழ்வாதாரத்திற்காக அன்றாடும் போராடிம், பழங்குடி மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்ட பட்டதாரி இளம் பெண், சோபா... தமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடியினர் வசித்துவருகின்றனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், பணியர், தோடர், கோத்தர் என 6 வகையானவர்கள் வசித்துவருகின்றனர். இதில் தோடர், கோத்தர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில்  அதிகம் வசிக்கின்றனர். பிற  நான்கு இன பழங்குடி மக்கள், கூடலூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். 
பழங்குடி மக்கள், பூர்வீகக்குடி மக்கள் எனப் பெயரளவில் இவர்களை அடையாளப்படுத்தினாலும், இவர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகள்குறித்து நாம் ஒரு போதும் சிந்திப்பது கிடையாது. 
இவர்களைப் பார்த்தால் பணியன், குரும்பன் என பார்த்து எள்ளி நகையாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 
ஆனால், நீலகிரி மாவட்டத்திற்குள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தாயகம் திரும்பிய மக்களுக்கு அரசு செய்த உதவியைக்கூட பழங்குடியின மக்களுக்கு ஏன் செய்யவில்லை என்பதே இந்த இளம் 
பெண்ணின் கேள்வியாக உள்ளது. சோபா...
நீலகிரி மாவட்டம் அம்பலமூலா பகுதியைச் சேர்ந்த பெட்ட குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்.  பெரும்பாலான பழங்குடியினப் பெற்றோர், தங்கள் பெண் குழந்தையின்  படிப்பை 5-ம் வகுப்போடு நிறுத்திவிடும் நிலையிலும், அவரை எம்.எஸ்.டபில்யூ., வரை படிக்க வைத்துள்ளனர் என்பது ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது. இவருடன் பிறந்தவர்கள் இரு தம்பிகள். முதல் தம்பி 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்
கொண்டு, தந்தையின் விவசாயத் தொழிலைக் கவனித்துவருகிறார். இரண்டாவது தம்பி,  பிஹெச்.டி., படிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார். இந்நிலையில், எம்.எஸ்.டபில்யூ படித்துவிட்டு, நான்கு 
அறைக்குள் வேலைசெய்ய விருப்பமில்லாத சோபா, பழங்குடியின மக்களுக்கான அடிப்படைத் தேவைகள்குறித்து ஆய்வுசெய்து, அதை தீர்த்துவைக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். 
இது குறித்து சோபா கூறுகையில், “அம்பலமூலா அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, சென்னை எம்.சி.சி-யில் பட்ட மேற்படிப்பையும் முடித்தேன். பெரும்பாலான பயண நேரங்களில் எதிர்கால திட்டம்குறித்து சிந்தித்தபோது, என் இன மக்களுக்காக, என்ன செய்ய வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. அப்போது, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய நேரம். 
பிறகு, இது நமது வேலையில்லை என உணர்ந்து, அந்த வேலையை விட்டுவிட்டேன்.

அதைத் தொடர்ந்து தாய்லாந்தில்,  ‘சவுத் ஏசியன் யூத் ஃபெடரேஷன்’ என்ற ஆசிய அளவிலான அமைப்பில் பணியாற்றினேன். அப்போது, பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டேன். என் இன மக்களுக்கான அரசியல் சூழ்ச்சிகளைச் சீரமைக்க முடிவுசெய்து சொந்த ஊருக்கே திரும்பினேன். பிறகு, நீலகிரி மாவட்ட மூத்த பழங்குடியினர் சங்கத்தில் இணைந்து, கூடலூர் தாலுகாவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படத் துவங்கினேன்.  தற்போதைய நிலையில் பழங்குடியின, பூர்வீக மக்களுள் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறேன். ஆனால், தாயகம் திரும்பிய மக்களுக்கு அரசு செய்த உதவியைக்கூட, எம் மக்களுக்கு செய்யாததை
என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இந்நிலையில், வன உரிமைச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2016ம் ஆண்டு இந்தியா முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டும், இதுவரை தமிழகத்தில் அரசு அமல்படுத்தாதது, என் இன மக்களுக்கு அரசு இழைக்கும் அநீதியாகவே இருந்து வருகிறது. அரசு இச்சட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில், பூர்வீக மக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முதல்படியாக இருக்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!