"கண்டம் வண்டியை மாற்று!"-கொந்தளிக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்

 

"கண்டம் வண்டியை மாற்று. காலி கிலோமீட்டர் இயக்கத்தைக் கைவிடு" என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கமான சி.ஐ.டி.யூ சங்கத்தினர், குளித்தலை பணிமனையில் காரசாரமான வாக்கியங்கள்கொண்ட போர்டை வைத்து பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மாவட்டம் என்பதால், அதிரிபுதிரி கிளம்பி இருக்கிறது. 

 கரூர் மாவட்டம், குளித்தலை போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்புதான் சி.ஐ.டி.யூ சங்கத்தினர் மேற்படி கடுமையான வாசகங்கள் கொண்ட போர்டை வைத்திருக்கிறார்கள். சம்பள உயர்வு, நிலுவையில் இருக்கும் போனஸ் உள்ளிட்ட விசயங்களை வழங்கக் கோரி, சமீபத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தி, தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்கவைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகள் ஓரளவு நிறைவேறவே,வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டார்கள்.

ஆனால், குளித்தலையில் இப்படி காட்டமான வாசகங்கள்கொண்ட போர்டை வைத்திருப்பது பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.
அந்த போர்டில், 'தமிழக அரசே! கழக நிர்வாகமே! இன்சென்டிவில் வஞ்சிக்காதே! தொழிலாளியோடு மோதாதே! நியாயமான இன்சென்டிவ் வழங்கிடு!  நேற்று பேட்டா, இன்று இன்சென்டிவ்? ஒன்றுபட்ட போராட்டம் வெற்றித்தரும். ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!" என்று எழுதி இருக்கிறது. மேற்கொண்டு, 'தந்தை பெரியார் வழியில் நாம். கண்டம் வண்டியை ஓட்டச் சொல்பவன் முட்டாள். அதில், கே.எம்.பி.எல் கேட்பவன் அயோக்கியன். ஓடும் கிலோமீட்டரைக் குறைத்து, ஓட்டுநரை டார்ச்சர் செய்பவன் காட்டுமிராண்டி. கண்டம் வண்டியை மாற்று! காலி கிலோமீட்டர் இயக்கத்தைக் கைவிடு! ஜி.எம் இல்லா கரூருக்கு 2 கார்+ 2 ஓட்டுநர். பரிசோதகர் இருவருக்கு 1 ஜீப்+1 ஓட்டுநர். சிக்கனம்டா சாமி! வௌங்கிரும்!' என்று ஏக காட்டமாக எழுதியிருக்கிறார்கள். போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மாவட்டத்தில் இப்படி ஒரு போர்டு எழுதப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டி இருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!