கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா கவர்னர்? – எதிர்பார்ப்பில் விவசாயிகள் | Will the governor save the promise made to the farmers?

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (23/02/2018)

கடைசி தொடர்பு:08:14 (23/02/2018)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா கவர்னர்? – எதிர்பார்ப்பில் விவசாயிகள்

திருச்சி மாவட்டத்தில் தமிழக ஆளுநர் ஆய்வுசெய்தபோது, அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர், அந்த மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

விவசாயிகள்திருச்சிக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் விசுவநாதன், காவிரி டெல்டா பாசன நல சங்கச் செயலாளர் கவுண்டம்பட்டி சுப்ரமணியம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் சந்தித்து அவரிடம் மனு கொடுத்தார்கள். அவர்கள் மனு கொடுக்கும்வரை அதிகாரிகள் பதற்றத்துடனேயே காணப்பட்டார்கள்.

த.மா.கா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன், “டெல்டா மாவட்டங்களில் காய்ந்து கருகும் சம்பா நெற்பயிர்களைக் காப்பாற்ற கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்துக்குத் தரவேண்டிய 81 டிஎம்சி தண்ணீரை மத்திய அரசு பெற்றுத் தரவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் மத்திய அரசு வணிக வங்கிகள் கடன் வசூலில் ஈடுபடுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்திவைப்பதோடு, மத்தி, மாநில அரசுகள் விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடிசெய்ய வேண்டும். திருச்சியில் இயங்கி வரும் வாழை ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு மூட முடிவு செய்திருப்பதைத் தடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.

அய்யாக்கண்ணு, “தமிழகத்தில் பெய்யக்கூடிய மழை கடலில் வீணாகக் கலக்கிறது. காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஏரி, குளங்களைத் தூர் வார வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தொழில் நுட்ப வல்லுநர் குழு கொண்ட குழு அமைக்கப் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும். வயதான விவசாயிகளுக்கு ரூ.5ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கவேண்டும். கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்”என்றார்.

பூ.விசுவநாதன், “தமிழ்நாட்டில் நீண்ட கால பிரச்னையாக காவிரி தண்ணீர் பங்கீட்டில் கர்நாடக அரசு தடையாக இருக்கிறது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக காவிரி பாசன விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கான காவிரிநீர் மாதம் மாதம் கிடைக்க ஒரே வழியான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீடு ஒழுங்காற்று குழுவை 6 வாரத்தில் அமைக்கவேண்டும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை ஆளுநர் நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். .விவசாயிகள்

 

இறுதியாகக் காவிரி டெல்டா பாசன நலச் சங்க செயலாளர் கவுண்டம்பட்டி சுப்ரமணியம், “காவிரி வடிநிலத்தில் உள்ள பாசன அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் பணிக்காக 16ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக பொதுப்பணித்துறை மத்திய அரசிடம் விண்ணப்பித்துப் பல வருடங்களாகிறது. அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கினால் மேட்டூர் அணையிலிருந்து கடை மடை வரையிலுள்ள அனைத்துப் பாசன வாய்க்கால்களும் புனரமைக்கப்படும். அதன்மூலம் விவசாயிகளுக்குப் பாசன வசதி கிடைக்கும். இந்தத் திட்டத்துக்காக நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க ஆளுநர் வலியுறுத்தவேண்டும். 2016-17கான பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்க இதுவரை இழப்பீடு வழங்கப்படாமல் பயிர் காப்பீடு நிறுவனங்கள் இழுத்தடித்து வருகின்றன. கடந்த ஆண்டு இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாத நிலையில் நடப்பாண்டு தொகை பிரிமியத்தை காப்பீட்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்கள்..

அனைத்தினையும் கேட்டுக்கொண்ட ஆளுநர் தலையாட்டியபடி கிளம்பினார். விவசாயிகளின் மனுக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா எனப் பார்ப்போம் என்கிறார்கள் விவசாயிகள்.