வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (23/02/2018)

கடைசி தொடர்பு:15:46 (28/06/2018)

``சாயக்கழிவால் மாசுபட்ட நிலங்களில் 1,000 ஏக்கர் அளவில் வனத்தோட்டம்!" - சட்டப்பேரவைக் குழு உறுதி

 

நொய்யல் ஆற்றுப்பாசன பகுதிகளில், சாயக்கழிவால் மாசுப்பட்ட 1,000 ஏக்கர் பரப்பளவில், வனத்தோட்ட கூழ்மரக்கன்றுகளை நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழு தெரிவித்தது.

கரூரில், தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,கரூர் மாவட்டம் சார்ந்த உறுதிமொழிகளான மாயனூரில் செயல்பட்டுவந்த ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைப் பணி, நொய்யல் ஆற்றில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை காளிங்கராயன் வாய்க்கால் நீரின் அளவு, தன்மையைத் தொடர்ந்து கண்காணித்தல், நொய்யல் ஆற்றுப்பாசனப் பகுதியில் சாயக்கழிவு நீரினால் மாசுபட்ட நிலங்களில், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் வனத்தோட்ட கூழ்மரக்கன்றுகளை நடவுசெய்தல், அய்யர்மலை அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் ஆலய மலைப்பகுதிக்கு ரோப்கார் வசதி செய்தல், பயணிகள் நிழற்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி, கடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற உறுதிசெய்யப்பட்டது.

மேலும்,கிருஷ்ணராயபுரம் வட்டம் சங்கமலைப்பட்டியில், துணை மின் நிலையம் அமைத்தல், கரூரில் கூட்டு உலர் திட்டக்குழு அலுவலகம் அமைக்கும் பணி, ஆயுதப் படைக்கென தனியாக நிர்வாக அலுவலகம் கட்டும் பணி, குளித்தலை, மஞ்சம்பட்டி,கொட்டியாம்பட்டி,மேலமேட்டுப்பட்டி,சங்காய்பட்டி,தோகைமலை,நெசவாளர் காலனி,பிள்ளை கோடங்கிபட்டி,கம்பந்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட 37 உறுதிமொழிகள் மீது ஆய்வுக்குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், உறுதிமொழிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுவருவதாகவும்,மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விடவும், குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரிய துறையினரிடம் ஆலோசனை வழங்கினார்.
 இக்கூட்டத்தில்...
"நிதிக்குழு, மனுக்கள் குழு,கணக்குக் குழு,பொது நிறுவனங்கள் குழு, உறுதிமொழிக்குழு என 12 வகையான தமிழ்நாடு அரசு சட்டமன்றப்பேரவை குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இதில், தமிழ்நாடு அரசு உறுதிமொழிக்குழுவால் நம் மாவட்டத்திலுள்ள 37 உறுதிமொழிகள்மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று செயல்பாட்டிலுள்ளன. மீதமுள்ள பணிகளும் உறுதிமொழிக்குழுவின் ஆலோசனைக்கிணங்க விரைந்து முடிக்கப்படும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.