"நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க!"- கமல் வருகையால் அ.தி.மு.க-வில் சலசலப்பு #VikatanExclusive | Kamal's political entry creates hustle in ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (23/02/2018)

கடைசி தொடர்பு:09:50 (23/02/2018)

"நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க!"- கமல் வருகையால் அ.தி.மு.க-வில் சலசலப்பு #VikatanExclusive

மல் வருகையைப் பார்த்து பயப்பட நாங்கள் என்ன சுயேச்சையா? என்பது போல, அ.தி.மு.க. மந்திரிகள் சொல்லிக்கொண்டிருந்தாலும், உண்மை அதுவல்ல, என்பதே  நிலவரம். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பலத்தைக் காட்டி,  ஒருவரிடமிருந்து ஒருவர், கட்சியைக் கைப்பற்ற முயன்ற ஆளுங்கட்சி, இப்போது கமலை ஒரே அணியாக நின்று பலத்துடன்  விமர்சிக்க  ஆரம்பித்திருக்கிறது.  கமலுக்கு எதிராக  அ.தி.மு.க. வேகம் பிடித்திருப்பதின் பின்னணி என்ன ?

கமல்

 

கமல் கட்சி ஆரம்பித்து அறிவிப்பு வெளியிட்டதும், ஆளுங்கட்சியில் அதகளம் ஆரம்பமாகி விட்டது. "இரண்டொரு நாளில் தமிழ்நாடு முழுவதும் கட்சிப் பொறுப்புக்கு ஆட்களை நியமிக்கும் அறிவிப்பு வரப்போகிறது, யாரும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிட வேண்டாம்... கட்சியில் சீனியர்களுக்கு வாரியம், சொசைட்டி டைரக்டர், மெம்பர், போர்டு மெம்பர் போன்ற பதவிகள் வரிசையாக அளிக்கப்படவுள்ளன. பகைமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பும் விரைவில் வரவிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை நாம்தான் பெறப் போகிறோம்" என்று தொண்டர்களுக்கும், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. முன்னரே கிளம்பினாலும், இன்னமும் ஸ்டேஷனுக்கு வராத ரயில்போல ரஜினியின் அரசியல் பயணம் இருப்பதால், பின்னால் கிளம்பி முன்னரே வந்து சேர்ந்துவிட்ட கமலுக்குக் கிடைத்திருக்கும் ஆளுங்கட்சியின் வரவேற்பு, ரஜினியை உஷார்படுத்தப் பெரிதும் உதவக்கூடும்..

                              டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.

அ.தி.மு.க. தொண்டர்கள் தரப்பு, "உறிப் பானையை அடிக்கப்போன  மூன்று பேருமே,  அதற்கு சரிப்பட்டு வரவில்லை. வேறு யாரும் 'உறி' யை அடித்து விடாதபடி பானையை மட்டும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சிதான் அந்த 'உறி' ப்பானை. கட்சியின் நிலைமை இப்படித்தான்,  இருக்கிறது. எங்களை எதிர்ப்பவர்களையும், அரசியலுக்கும்- ஆட்சிக்கும் வர ஆசைப் படுகிறவர்களையும்  'டம்மி' யாகக் காட்டும் வேலைகளை, எப்போதும்போல் மந்திரிகள், செய்துகொண்டிருக்கிறார்கள். விஜயகாந்த், ரஜினி, விஷால் என்று, இப்படி நீண்ட பட்டியல் கையில் இருக்கிறது.  அந்தப் பட்டியலில் இப்போது கமலும் வந்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் என்று காரணம் காட்டி, தினமும் ஐந்நூறு பேரை, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உத்தரவுப்படி  நீக்கும் அறிவிப்புகள் வருகின்றன.  அப்படி நீக்கிய இடத்துக்குப் புதிய பொறுப்பாளர்களைப் போட வேண்டும். ஈ.பி.எஸ்ஸோ, ஓ.பி.எஸ்ஸோ, அப்படி யாரையும் இதுவரை  பொறுப்பில் போடவில்லை.

தமிழ்நாடு முழுவதும், கட்சிக்கு  மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில், தொடர்ந்து இழுபறி  நீடிக்கிறது. தி.மு.க.வின் கட்சி மாவட்டத்தைவிட ஒரு மடங்கு அதிகமாகவே, மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் திட்டம் இருந்தது. அந்தக் கணக்குப்படி பார்த்தால், தமிழ்நாட்டில், 80 மாவட்டச் செயலாளர்கள் வரையில் நியமித்திருக்க வேண்டும், ஆனால் அந்தத் திட்டம், வெற்றுத் திட்டமாகவே நின்று விட்டது" என்றனர்.ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் அ.தி.மு.க. மா.செ-க்களின்  விளம்பர  அறிவிப்புகளைவிட, தினகரன் அணி மா.செ-க்களின் விளம்பர அறிவிப்பே, இதனால் அதிகமாக இருக்கிறது. டி.டி.வி. தினகரனோ, ஆட்களை நீக்குவதற்குப் பதில், புதுப்புது மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்துகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க.வின், வாக்குகள்  இப்போது மூன்றாகப் பிரிந்து கொண்டிருக்கின்றன. 'ஜெயலலிதாபோல்  ஒரே தலைமையாக  கட்சியை வழி நடத்தினால் சிறப்பாக இருக்கும்' என்ற  தொண்டர்களின் எதிர்பார்ப்பை கமல் அறுவடை செய்து விடுவாரோ என்ற பயம், இப்போது அ.தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. 'அ.தி.மு.க-வில் நல்லவர்கள் அதிகம் இருக்கிறார்கள், என்ன செய்வது என்று தெரியாமல் பதைபதைத்துப் போய்க் கிடக்கிறார்கள்' என்று, கமல் அளித்த பேட்டி அதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.  நிலைமை இப்படி இருக்க... கமல் ஜூனியர் விகடனுக்கு “அ.தி.மு.க-வில் நல்லவர்கள் அதிகம் இருக்கிறார்கள்!” என்று பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
 


டிரெண்டிங் @ விகடன்