அடுத்தடுத்த சிக்கலில் சார் பதிவாளர் சிவபிரியா!  - மலைக்க வைக்கும் நில மோசடி ஆவணங்கள்

போலீஸாரிடம் சிக்கிய சார்பதிவாளர் சிவபிரியாவின் ரகசிய ஆவணங்கள்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சென்னையில் சார்-பதிவாளராகப் பணியாற்றிய சிவபிரியா போலீஸாரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பான ரகசிய ஆவணங்கள், சாலையில் வீசப்பட்டதை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். 

சென்னை, ஆலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர், கடந்த 1995-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரது பெயரில் பள்ளிக்கரணை கிராமத்தில் 3,352 சதுரஅடி காலி இடம் இருந்தது. இந்த இடத்தின் மதிப்பு ஒரு கோடியே 50 லட்சமாகும். இந்த இடம், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொக்கலிங்கத்தின் மகன், சிதம்பரம், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் சொக்கலிங்கத்தின் இடத்துக்கு சிலர் உரிமை கோரியதோடு, ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சொக்கலிங்கம் இடம் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்படும்போது சைதாப்பேட்டையில் சார் பதிவாளராக சிவபிரியா பணியாற்றினார். இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த 13-ம் தேதி சிவபிரியாவை போலீஸார் கைது செய்துள்ளனர். அடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு தாசில்தார் ரவிசந்திரன் கொடுத்த புகாரிலும் சிவபிரியா கைது செய்யப்பட்டுள்ளார். 

 தூசி தட்டப்படும் புகார்கள் 

சார்-பதிவாளர் சிவபிரியாஇதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், "சிதம்பரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரின் கூட்டாளிகள்  திருவொற்றியூர் விக்னேஷ்வரன், தண்டையார்பேட்டை ராஜேஸ்வரன் ஆகியோரைக் கடந்த ஜனவரியில் கைது செய்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தி சார்-பதிவாளர் சிவபிரியாவைக் கைது செய்துள்ளோம். இந்தச் சூழ்நிலையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியின் அருகே பிளாஸ்டிக் பைகள் கிடப்பதாக மயிலாப்பூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, அதைக் கைப்பற்றி ஆய்வுசெய்தபோது அவை அனைத்தும் சார்-பதிவாளர் சிவபிரியாவுக்குத் தொடர்புடைய ஆவணங்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த ஆவணங்களை மயிலாப்பூர் போலீஸார் எங்களிடம் ஒப்படைத்தனர். அது தொடர்பாக விசாரித்துவருகிறோம். அதில் சிவபிரியா சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்கள் உள்ளன. 
 
 இந்த நிலையில், சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிசந்திரன், கடந்த 2014-ம் ஆண்டு எங்களிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த எட்டியப்பன், துணை வட்டாட்சியர் புனிதவதி, வேளச்சேரியைச் சேர்ந்த ரவி, அவருடைய சகோதரர் வெங்கடேசன், மற்றும் தேவன், ராமலிங்கம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கிலும் சார்-பதிவாளர் சிவபிரியாவுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நில மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நில போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதில் வருவாய் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

 துணை போன வருவாய்துறை 

பதிவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சிவபிரியா தேர்ச்சி பெற்றார். அவர் 2002-ம் ஆண்டு பத்திரப் பதிவுத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். விருகம்பாக்கம் அலுவலகத்தில் அவர் பணியாற்றியபோது 76 பத்திரங்கள் விதிகள் மீறி பதிவானது தெரியவந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி, அரசு இடம் ஆகியவற்றைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 368 பத்திரங்களில் சிவபிரியா பணியிலிருந்தபோது  252 பத்திரங்கள் பதிவாகியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளன. தற்போது, சிவபிரியா கைது செய்யப்பட்டுள்ளதால் அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவர்மீது துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. சிவபிரியா பணியாற்றிய இடங்களில் அவர் யாரிடமும் அதிர்ந்துகூட பேச மாட்டார். பவ்யமாகத்தான் இருப்பார். சிக்கலான பதிவு என்றால், அதை அலசி ஆராய்ந்தபிறகே பதிவு செய்வார். ஆனால், வழக்கம்போல மற்ற சார் - பதிவாளர்களைப் போலத்தான் அவரும் செயல்படுவார். இல்லையெனில் பதிவுத்துறையில் பணியாற்ற முடியாது" என்றனர். 

சிவபிரியா மட்டுமல்ல... 

சிவபிரியாவின் கணவர், தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மேலும், சிவபிரியா, பா.ம.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு உறவினர். சிவபிரியா மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்மீது சில காரணங்களால் போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பதிவுத்துறையில் பணியாற்றிய  மூத்த அதிகாரி ஒருவர்தான் சிவபிரியாவுக்கு குரு என்கின்றனர். அவர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். சிவபிரியா, சென்னையில் பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றியுள்ளார். சிவபிரியா மீதுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவரது சொத்து விவரங்களை ரகசியமாகக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிவபிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரை ஜாமீனில் வெளியில் எடுக்கும் வேலையிலும் அவருக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

சிவபிரியாவைக் கைது செய்துள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிவுத்துறையைப் பொறுத்தவரை புரோக்கர்கள் அதிகம். அதைத் தவிர்க்கத்தான் ஆன்லைன் பதிவை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்தத் துறையில் முறைகேட்டில் கோலோச்சியவர்களைத் தடுக்க முடியவில்லை. பதிவுத் துறையில் பணியாற்றும் பலர் செல்வச்செழிப்பாக உள்ளனர். பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர். அந்தளவுக்கு இந்தத் துறையில் முறைகேடு நடந்துவருகிறது. முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமலிருக்க கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை கவனிக்கப்படுவதால் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பலரது கைகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, பதிவுத்துறையில் கிளீன் ஆபரேசன் நடத்தப்பட்டாமல் மட்டுமே அந்தத் துறையின் மீதுள்ள களங்கத்தை அகற்ற முடியும். அதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

போலீஸ் உயரதிகாரியிடமே பவரைக் காட்டிய சிவபிரியா 
 

சிவபிரியா மீது சில ஆண்டுகளுக்கு முன்பே, புகார்கள் சென்னை போலீஸுக்கு வந்தன. ஆனால், அதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நிலமோசடி வழக்கில் போலீஸ், பதிவுத்துறை, வருவாய்த் துறை எனப் பலருக்கு தொடர்பு உள்ளதால் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடிவதாக நேர்மையான போலீஸார் தெரிவிக்கின்றனர். தற்போது வழக்கில் சிக்கிய சிவபிரியா, சென்னையில் பணியாற்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவரின் உறவினரிடமே தன்னுடைய பவரைக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், சிவபிரியா மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க மேலிடம் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம். இதனால்தான் சிவபிரியா மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கின்றன. அவருக்கு எதிரான ஆவணங்களையும் சாட்சிகளையும் தயார்பண்ண போலீஸ் நெட்வொர்க் பம்பரமாகச் சுழன்று வேலை செய்துவருகிறது. சிவபிரியா மீது எடுத்த நடவடிக்கையால் அவருக்கு நெருக்கமான பதிவுத்துறை நண்பர்கள் பதற்றத்தில் உள்ளனர். 

திட்டமிட்ட சதி 

சிவபிரியாவுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். "பத்திரப் பதிவு விதிமுறையில் எழுதி வாங்குபவர், எழுதிக் கொடுப்பவர் ஆகியோரின் அடையாள அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்வது சார் பதிவாளர்களின் பணி. அடுத்து, சொத்துத் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்தபிறகு தகுதியிருந்தால் ஆவணம், பதிவு செய்யப்படும். அதில் எங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் பதிவு நிறுத்தப்படும். பதிவான ஆவணங்கள் தொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்தால், அதை ரத்து செய்யலாம். போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் ஆகியவற்றைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளன. அந்தச் சிக்கல் காரணமாகத்தான் சார் பதிவாளர்கள் வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர்.   

சொத்தை எழுதிக் கொடுப்பவர், போலி ஆவணங்கள், ஆள் மாறாட்டம் செய்வதால், அந்த ஆவணங்களைப் பதிவு செய்ததற்காகச் சம்பந்தப்பட்ட பதிவாளர்கள் வழக்கில் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வகையில்தான் சிவபிரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பொறுத்தவரை, சிலர் பின்னிய சதிவலையில் சிக்கியுள்ளார். அதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். குற்றங்களை நிரூபிப்பதற்குள்ளேயே சிவபிரியா மீது அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது. அந்த வேலைச் செய்பவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும். முறையான ஆவணங்களைச் சமர்பித்ததால் அவர், ஆவணங்களைப் பதிவு செய்துகொடுத்துள்ளார். அவர் கமிஷன் வாங்கியதாகச் சொல்லப்படுதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. சிவபிரியாவைப் பழிவாங்கவே அவர்மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. வழக்கு விசாரணையில் உண்மை தெரியும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!