`56 பேர் தயார் என்றால் நானும் தயார்' - காவிரி விவகாரத்தில் அன்புமணி தடாலடி | If other 56 was ready, then I also ready to resign mp post for Cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (23/02/2018)

கடைசி தொடர்பு:13:00 (23/02/2018)

`56 பேர் தயார் என்றால் நானும் தயார்' - காவிரி விவகாரத்தில் அன்புமணி தடாலடி

`காவிரிப் பிரச்னைக்காகத் தமிழகத்தின் 56 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்' என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
 
அன்புமணி
 
தஞ்சாவூரில் நடைபெறும் கட்சி விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம்மூலம் திருச்சி வந்த பா.ம.க இளைஞரணித் தலைவரும் எம்.பி-யுமான அன்புமணி, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஒரு வாரம் ஆகியும் காவிரி நடுவர் மன்றம் அமைக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. பல வருடங்களுக்குப் பிறகு, காவிரிப் பிரச்னைக்காகத் தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரங்களில், மத்திய அரசு தாமதமின்றி வரும் மார்ச் மாத இறுதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். இல்லையெனில், மார்ச் 30-லிருந்து தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டங்கள் வெடிக்கும்.
 
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, 511 டி.எம்.சி தமிழகத்துக்குக் கிடைத்தது. ஆனால், அந்தக் காவிரி நீர் தற்போது, 300 டி.எம்.சி வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, காவிரி நீரை குறைத்து வழங்கப்பட்ட தீர்ப்பு வருத்தமளிக்கிறது. ஆனால், மற்றபடி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மாதா மாதம் கூட்டம் நடத்தி, தண்ணீர் வழங்குவதைக் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நல்ல ஷரத்துக்கள் உள்ளன. இந்த விவகாரத்தில், மத்திய அரசு மௌனமாக இருக்கக் கூடாது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் மூன்றுவிதங்களில் மோசடிகள் நடக்கின்றன. இந்தத் திட்டத்தில், தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூபாய் 12 ஆயிரம் வழங்குகிறது. இந்த நிதியைப் பல வகைகளில் தமிழக அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. மோடிக்கு மிகவும் பிடித்த இந்த திட்டத்தில் நடந்த மோசடிகளை விசாரிக்க, பிரதமர் மோடி  உடனடியாக உத்தரவிட வேண்டும்.
 
ஆந்திர எம்.பி-க்கள் 15 பேர், கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தை முடக்கியதுபோல, காவிரிப் பிரச்னைக்காக தமிழகத்தின் 38 மக்களவை உறுப்பினர்களும், 18 மாநிலங்களவை உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில், நமது உரிமையைப் பெற்றிட தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்றால், நானும் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன். மேலும், காவிரி தீர்ப்பில் மேல் முறையீடுசெய்ய முடியாது என  நீதிபதிகள் சொல்ல முடியாது. மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மேல், பல மேல்முறையீட்டு முறை உள்ளது. இந்த விவகாரத்தில் சித்தராமையா சொல்வதுபோல மேல்முறையீடு செய்ய முடியும்" என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க