``லஞ்ச அதிகாரிகளின் கைகளை வெட்ட `எந்திரன்' ரோபோ வர வேண்டும்'' - ஹெச்.ராஜா சர்ச்சை பேட்டி | H.Raja slams bribing officials

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (23/02/2018)

கடைசி தொடர்பு:13:40 (23/02/2018)

``லஞ்ச அதிகாரிகளின் கைகளை வெட்ட `எந்திரன்' ரோபோ வர வேண்டும்'' - ஹெச்.ராஜா சர்ச்சை பேட்டி

``லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் கைகளை வெட்டுவதற்கு `எந்திரன்' படத்தில் வரும் ரோபோ போன்ற மெஷின்கள் வர வேண்டும்'' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா

தஞ்சாவூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, வழியில் புதுக்கோட்டையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ''தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இந்துக் கோயில்களை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ அமைப்புகள் கட்டடங்கள் கட்டியுள்ளன என்று பட்டியலிட்டார். புதுக்கோட்டையிலும் அப்படி ஓர் இந்துக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதை நேரில் பார்த்துவிட்டு வந்ததாகவும் கூறினார். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு தாசில்தார், சார் பதிவாளர் போன்றோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு துணைபோகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தில் வரும் ரோபோ, தன்னிடம் லஞ்சம் கேட்டு கையை நீட்டும்  டிராஃபிக் போலீஸின் கைகளை வெட்டும். அதுபோல, லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்துக் கோயில் நிலங்களை கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளுக்கு ரிஜிஸ்டர் செய்து தரும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் கைகளை வெட்டுவதற்கு ரோபோ போன்ற மெஷின்கள் வர வேண்டும். புதுக்கோட்டையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை மீட்பதற்காக அயோத்தியில் ராமர் கோயிலை மீட்க ஒன்றுதிரண்டதுபோல நாங்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்துவோம். அந்த இடத்தை கிறிஸ்துவ அமைப்புகளுக்குப் பதிவுசெய்து கொடுத்த தாசில்தார், சார் பதிவாளர் இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டுக்கு முன்பாகத் திரண்டு, 'மண்ணை வாரித் தூற்றும் போராட்டம்' நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன். தமிழகம் முழுவதும் கிறிஸ்துவ அமைப்புகள் இந்துக் கோயில்களை ஆக்கிரமிப்பு செய்வதை அரசு உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும்.

இந்துக் கடவுள்கள் இங்கிதம் தெரிந்தவை. அதனால்தான், அவற்றின் பெயர்களில் சொத்துகளை வாங்க இந்து மதம் அனுமதிக்கிறது. கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களில் அப்படிச் செய்யமுடியாது. இந்துக் கடவுள்கள் பெயரில் சொத்துகள் வாங்க நமது சட்டம் அனுமதிக்கிறது. அதனால்தான், இந்துக் கடவுள்களுக்கு சொத்துகள் ஏராளமாக இருக்கின்றன. அவையெல்லாம் கோயிலைப் பராமரிப்பதற்காக  உள்ளவை.
மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மாநிலத்தில், இந்து அமைப்புகள் நடத்திவந்த 152 பள்ளிகளை இழுத்து மூடியிருக்கிறார். அவருக்கு முதுகெலும்பு இருந்தால், இந்துப் பள்ளிகளை மூடியதுபோல, அங்கே செயல்பட்டுவரும்  மதரஸா பள்ளிகளையும் மூட வேண்டும். செய்வாரா. கோயில் சொத்துகளை ஆட்டையப் போடத்தான் திராவிடக்கட்சிகள், கடவுள் இல்லை என்று இத்தனை வருடங்களாக சொல்லித் திரிந்தன. இந்துக்கள் இதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.