``கமல் திறமைசாலி; மக்கள் நம்பிக்கையை விரைவில் பெறுவார்'' - ரஜினிகாந்த் பேட்டி!

நேரம் வரும்போது சுற்றுப்பயணம் சென்று நேரடியாக ரசிகர்களைச் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியதுடன், முதல் பொதுக்கூட்டத்தையும் மதுரையில் நடத்திவிட்டார் நடிகர் கமல்ஹாசன். இதன்மூலம் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட அவர், கட்சியை வலுப்படுத்தும் வேளைகளில் இறங்கிவிட்டார். இவரைப்போலவே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதற்கிடையே கமலின் அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின் ரஜினிகாந்த்தின் அரசியல் நடவடிக்கைகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த அவர், என் ரசிகர்களுக்கு மற்றவர்கள் அரசியல் கற்றுத்தர வேண்டாம்; அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள் என்று பேசி உற்சாகப்படுத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்திய தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 32 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறேன். அவர்களை ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு சில காலம் ஆகும். நேரம் வரும்போது சுற்றுப்பயணம் சென்று நேரடியாக ரசிகர்களை சந்திப்பேன். அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்த பின் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் குறித்து முடிவு செய்யப்படும். நானும் கமலும் வெவ்வேறு பாதையில் சென்றாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செல்கிறோம். கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. கமலின் மக்கள் நீதி மய்யம் நன்றாகச் செயல்படும் என நம்புகிறேன். அவர் திறமைசாலி என்பதால் மக்கள் நம்பிக்கையை விரைவில் பெறுவார்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!