கம்பைச் சுழற்றிய ஜஸ்டின் ட்ரூடோ! - பின்னணியில் சில காரணங்கள்

இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டினைப் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். உலகம் முழுக்க மனித நேயமிக்க மனிதராக ஜஸ்டின் அறியப்பட்டாலும் அவரின் காலிஸ்தான் ஆதரவு கொள்கை பிரதமர் மோடியைப் பாராமுகமாக இருக்க வைத்தது. 1980-களில் பஞ்சாப் மாநிலத்தைத் தனிநாடாகப் பிரித்து தர கோரி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தீவிரமாக இயங்கி வந்தது. 1984-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த அதிரடி நடவடிக்கையால் காலிஸ்தான் அமைப்பு சிதைந்துபோனது.

பொற்கோயிலுக்குள் புகுந்து இந்திய ராணுவம் 'ப்ளு ஸ்டார் ' ஆபரேஷன் நடத்தியது. இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டதும் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் அடுத்தடுத்த விளைவுகள். 1985-ம் ஆண்டு கனடாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைத்ததில் 329 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்வத்துக்கும் காலிஸ்தான் அமைப்பு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கனடா பிரதமர் ஜஸ்டின்

இந்தியாவிலிருந்து வெளியேறிய காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் , பல்வேறு உலக நாடுகளில் தஞ்சமடைந்தனர். கனடாவில் தஞ்சமடைந்தவர்களும் அதிகம். இப்போது, கனடாவில் கணிசமான அளவில் சீக்கிய மக்கள் வாழ்கின்றன. ஜஸ்டின் அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் உள்ளனர். ராணுவ அமைச்சர்கூட ஹர்ஜித் சிங் சாஜன்கூட சீக்கியர்தான். அங்கும் ஓட்டு அரசியல் இல்லாமல் இல்லை. சீக்கிய மக்களின் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் ஜஸ்டினின் லிபரல் கட்சிக்குத் தேவை. அதற்காக காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை ஜஸ்டின் எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

ஜஸ்டின் அமைச்சரவையில் உள்ள சீக்கிய அமைச்சர்களுக்கு இப்போதும் 'காலிஸ்தான் கனவு' இருக்கத்தான் செய்கிறது. பஞ்சாப்பை தனிநாடாக்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர் அவர்கள். கனடா நாட்டு ராணுவ அமைச்சர் ஹர்ஜித் சிங் கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கை சந்திப்பதற்காக இந்தியா வந்தார். காலிஸ்தான் ஆதரவாளர் என்பதால் அம்ரீந்தர் சிங் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். தன் அமைச்சரை சந்திக்க மறுத்த பஞ்சாப் முதல்வரை சந்திக்காமல் அவருக்கு பதிலடி கொடுக்க ஜஸ்டின் டரூடோ நினைத்தார். 

ஆனால், பிரதமர் மோடி கடைசி வரை பாராமுகமாக இருந்துவிட இறுதியில் அம்ரீந்தர் சிங்கை சந்தித்து, `ஒருங்கிணைந்த இந்தியா'வுக்கு ஆதரவு என்று தன் ராணுவ அமைச்சர் முன்னிலையிலேயே உறுதி அளிக்க வேண்டிய நிலைக்கு ஜஸ்டின் தள்ளப்பட்டார். முடிவு சுபம். இறுதியில் பிரதமர் மோடியையும் ஜஸ்டின் சந்தித்துள்ளார்.  

இந்தியாவுக்குள் நுழைந்து கம்பு சுத்தியும் ஜஸ்டினுக்கு பலன் கிடைக்கவில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!