வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (23/02/2018)

கடைசி தொடர்பு:14:55 (23/02/2018)

ஜெயலலிதாவின் கார் டிரைவர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்!

ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

டிரைவர் ஐயப்பன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, தர்மயுத்தம் என்கின்ற பெயரில் ஓ.பி.எஸ் போராட்டம் நடத்தினார். அதன்விளைவாக, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில் தினமும் விசாரணை நடந்துவருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்துவருகின்றனர்.

விசாரணையில், இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜெ-யின் தோழி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் உள்ள அவரிடம், நீதிபதி ஆறுமுகசாமி விரைவில் விசாரணை நடத்த உள்ளார். இதற்கிடையே, ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள், சமீபத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இன்று ஜெ-வின் டிரைவராக இருந்த ஐயப்பனும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் 10 நிமிடம் மட்டுமே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். பின்னர், அடுத்த மாதம் 8-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என ஐயப்பனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க