வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (23/02/2018)

கடைசி தொடர்பு:18:26 (23/02/2018)

`உங்கள் வரவை எதிர்பார்த்திருந்தோம்' - கனடா பிரதமரை நெகிழவைத்த மோடி

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் என பிரதமர் மோடியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

modi, justin


இந்தியாவுக்கு முதல் முறையாக ஏழு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்காதது ஊடகங்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரின் குடும்பத்தினரை இன்று காலை ராஷ்டிரபதி பவனில் உற்சாகமாக வரவேற்று சந்தித்துப் பேசினார் மோடி. இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். மோடி பேசுகையில் ‘உங்கள் வரவை இந்தியா நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது. குடும்பத்துடன் தற்போது இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக கனடா- இந்தியா இணைந்து செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் உயர் கல்வியை திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கு கனடா முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் கனடா கல்வி நிறுவனங்களிடேயே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக கனடாவைதான் தேர்ந்தெடுக்கிறார்கள். சுமார், 1 லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், தங்களது உயர்கல்வியை கனடாவில் தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா, மாலத்தீவு விவகாரத்தில் கனடாவும், இந்தியாவும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்தியாவின் அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளை கனடாவால் பூர்த்தி செய்ய முடியும். மதத்தை அரசியலாக்கி பிரிவினை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு நம் இரு நாடுகளிலும் இடமில்லை. இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் இங்கு நிலைபெறாது’ என்றார்.

இதனையடுத்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ ‘வணிக ஒத்துழைப்பைப் பொறுத்தவரையில் கனடாவுக்கு இந்தியா நம்பகமான நண்பர்’ என்றார்.