வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (23/02/2018)

கடைசி தொடர்பு:17:15 (23/02/2018)

“அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு ஏன் கூப்பிடலை!” - கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயச் சங்கம்

விவசாய சங்கம் நல்லசாமி

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பவானி பாசன பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்!” என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் நல்லசாமி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.

கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் நல்லசாமி பேசுகையில், “காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலக வளாகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் 16 விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், காவிரி வடிநிலத்தில் உள்ள பவானி ஆற்றில் கட்டப்பட்ட பவானிசாகர் அணையில் இருந்து 2.5 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இந்த நீரால் கிட்டத்தட்ட 3 மாவட்ட மக்கள் பாசனம் பெறுகின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் இருந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எங்களைப் புறக்கணித்த நிலையில், தமிழக அரசும் எங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்காமல் புறக்கணித்துள்ளது. தொடர்ந்து காவிரிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வரும் எங்களுடைய விவசாய அமைப்புக்கு அழைப்பு அளிக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசின் பார்வைக்கு இதைக் கொண்டு செல்ல வேண்டும்” என்று வருத்தப்பட்டார்.