வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (23/02/2018)

கடைசி தொடர்பு:17:45 (23/02/2018)

`அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு வரும் கனடா பிரதமரே' - அதிரவைக்கும் ஃப்ளெக்ஸ்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே

`ஜாதி, மதம் பேதமின்றி பழகும் எங்கள் மண்ணில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண குடும்பத்துடன் வருகைதரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அவர்களை வரவேற்கிறோம்' என்று வாசகங்களுடன் மெகா சைஸ் போர்டு வைத்து பரபரப்பை எகிடுதகிடாகக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கடைவீதியில் மிகப்பெரிய ஃப்ளெக்ஸ் ஒன்று நேற்று இரவு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டது. இன்று காலை அதைப் பார்த்தவர்கள் திகைத்துப்போனார்கள். காரணம், இந்தியாவில் ஒருவார கால சுற்றுலாப்  பயணமாகத் தன்குடும்பத்துடன் வந்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அன்னவாசலில் எதிர்வரும் 28-ம் தேதி நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண்பதற்காக வருவதாகவும் அவர்களை ஊர் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அந்த ஃப்ளெக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு பட்டுசட்டை, வேட்டி, அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு, ஜஸ்டின் ட்ரூடே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரை நிகழ்த்துவது போலவும் மெகா சைஸ் படமும் அதில் இடம்பெற்றிருந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு, தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள், கனடா பிரதமரின் தமிழ் மற்றும் தமிழர்கள் மீதான பாசம், அவர் தற்போது இந்தியாவுக்கு வந்திருப்பது போன்ற விசயங்களையெல்லாம் ஒன்றுகூடி, `நிஜமாகவே கனடா பிரதமர் ஜல்லிக்கட்டைக் காண நம்ம ஊருக்கு வருகிறாரோ' என்ற எண்ணத்தையும் பரபரப்பையும் அந்த ஊர்மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டிருக்கிறது. போதாததுக்கு, போர்டை வைத்த ஐந்து இளைஞர்கள் நேற்றிரவு போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டுவிட, பரபரப்பு கூடுதலாகப் பற்றிக்கொண்டது. ஊர்க்காரர்கள் போர்டு வைத்த இளைஞர்களைத் தொடர்புகொண்டபோது, அவர்களது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சிலர் அவர்களைத் தேடி நேரில் சென்று விசாரித்தபோதுதான், "நம்ம ஊர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும்படி கனடா பிரதமர் இந்தியாவில் தங்கியிருக்கும் முகவரிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருப்பதாகவும் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் கனடா பிரதமர் புகழ்ந்து பேசியதால், தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை காண வருவார் என்ற நம்பிக்கையில் அந்தப் போர்டை வைத்தோம்" என்று கூறியிருக்கிறார்கள்.