`மீண்டும் திருடுவேன்; என் வழித் தனி வழி' - கொள்ளையனின் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ் | Police arrest two wheeler thief in Mayiladuthurai

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (23/02/2018)

கடைசி தொடர்பு:18:40 (23/02/2018)

`மீண்டும் திருடுவேன்; என் வழித் தனி வழி' - கொள்ளையனின் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீஸ்

23 மொபட்டுகளைத் திருடிய திருடன், ''நீங்கள் எத்தனை முறை ஜெயிலில் போட்டாலும், திரும்ப வந்து திருடுவேன், என் வழித் தனி வழி'' என்று வாக்குமூலம் கொடுக்க போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

போலீஸ்- திருடன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகமாகி, எல்லா காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனால், மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன், ஏட்டு அர்ச்சுணன் தலைமையில் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள் திருட்டைத் தடுக்கும் வகையில் வாகனப் பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாப்படுகை அண்ணா சிலை அருகே போலீஸார் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் வரவே, அவரை நிறுத்தி விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொன்னார். எனவே, காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து முறைப்படி விசாரித்தபோதுதான் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, கத்திரிமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் டூவீலர் திருடன் என்பதை அறிந்து அவன் மூலமாக 23 மொபட்டுகளைக் கைப்பற்றினர். செல்வம்மீது சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் மற்றும் கும்பகோணம் காவல் நிலையங்களில் டூவீலர் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், செல்வத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட 23 வாகனங்கள் அனைத்துமே டி.வி.எஸ் எக்ஸ்.எல் என்ற சிறிய ரக வாகனங்களாகவே இருந்தன. `இதைவிட அதிக மதிப்புடைய பெரிய வாகனங்களை நீ திருடி இருக்கலாமே' என்று போலீஸார் செல்வத்திடம் கேட்டபோது, அவன் சொன்ன பதில்கள் வியப்பாக இருந்தன.

''சார், எனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாது. அதை ஓட்டத் தெரிந்தவனை வைத்துக்கொண்டுத் திருடினால் அவனுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். அது எனக்குப் பிடிக்காது. என் வழித் தனி வழி. நான் மொபட் திருடி விற்று அதைக்கொண்டு வாழ்க்கை நடத்துபவன். இந்தத் தொழில் எனக்கு ரொம்ப பழகிப்போச்சு.  இதிலிருந்து நான் மாற முடியாது. ஜெயிலில் இருந்தா அங்கே எனக்கு சோறு போடுவாங்க.  வெளியில் வந்தா எனக்கு யாரு சோறு போடுவாங்க. இப்போது நீங்கள் என்னை ஜெயிலில் போட்டாலும் திரும்ப வந்து நான் இந்த டூவீலர் திருட்டுத் தொழிலைதான் செய்வேன்'' என்று செல்வம் சொல்லியபோது போலீஸார் அதிர்ந்துபோனார்கள்.

''செல்வம் திருடிய மொபட்டுகளை வெறும் ரூ.300, ரூ.400-க்குதான் விற்றுள்ளான். செல்வத்தைவிட இந்த மொபட்டுகளை வாங்கியவர்கள்தான் பெரிய திருடர்கள். என்றாலும், செல்வத்தைக் கைதுசெய்து இன்று கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளோம்'' என்றனர் போலீஸார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க