கடப்பாவில் தமிழர் சடலங்கள்! - உண்மையறியும் குழு சொல்வது என்ன? | FInal report on 5 TN woodcutters in Kadappa

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (23/02/2018)

கடைசி தொடர்பு:19:10 (23/02/2018)

கடப்பாவில் தமிழர் சடலங்கள்! - உண்மையறியும் குழு சொல்வது என்ன?

கடப்பாவில் தமிழர் படுகொலை

ஆந்திர மாநிலம் கடப்பாவில் 5 தமிழர்கள் மரணம் எனக் கூறப்படுவது தவறு என்றும் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களின் சடலங்களை தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முன்பாக மீண்டும் கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் உண்மை அறியும் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஆந்திர மாநில ஓபிடிஆர் அமைப்பின் தலைவர் சீனிவாசலு, பொதுச்செயலாளர் ராமகுமார், இணைச்செயலாளர் டி.ஈஸ்வர், தெலுங்கானா பொதுச்செயலாளர் பி.நரசிம்மா, கடப்பா மாவட்ட ஓபிடிஆர் தலைவர் சிவரெட்டி, துணைத் தலைவர் கொண்டாரெட்டி ஆகியோர், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து கடப்பாவில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, நடந்ததை விவரித்தனர். 

சடலங்கள் வைக்கப்பட்டிருந்த கடப்பா ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையிலும் சம்பவம் நடந்த செர்லோபள்ளி கிராமத்திலும் உண்மை அறியும் குழுவினர் கண்டறிந்த விவரங்களைக் கொண்ட அறிக்கை, வெளியிடப்பட்டுள்ளது. 
அதன் விவரம் வருமாறு:

ஓண்டிமிட்டா ஏரிக்கு அருகிலுள்ள குட்டையில் பிப்.11 ம் தேதி முற்பகல் 11 மணியளவில் 5 பேரின் சடலங்கள் மிதந்துள்ளன. அதை ஓண்டிமிட்டா கிராமத்தினர் பார்த்துள்ளனர். உள்ளூர் போலீஸுக்கு அவர்கள் தகவல்தெரிவித்துள்ளனர். அன்று மாலையில் 5 சடலங்களும் குட்டையிலிருந்து மீட்கப்பட்டன. 

அப்போது அந்தச் சடலங்கள் வீங்கியநிலையிலும் தோல் உரிக்கப்பட்டும் காணப்பட்டுள்ளன. அதே இடத்தில் மரணப் புலன்விசாரணை நடத்தப்படவில்லை. பின்னர் 5 சடலங்களும் கடப்பாவில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 

மறுநாள் முற்பகல் 11 மணியளவில் போலீஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, சவக்கிடங்கின் வாயில்கள் பூட்டப்பட்டன. நுழைவாயிலின் முன்பு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அதன் பிறகே அங்கு மரணப் புலன்விசாரணை நடத்தப்பட்டது. பொதுமக்களோ ஊடகத்தினரோ யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக, சடலக்கூறாய்வும் செய்துமுடிக்கப்பட்டது. மரணப் புலன்விசாரணையில் இறந்துபோனவர்களின் ரத்த உறவினர் ஒருவர்கூட இல்லை. 

* சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட குளத்தில் இடுப்பளவு தண்ணீர்தான் உள்ளது. அதன் அடிப்பகுதி மண், கடினத்தன்மை கொண்டது. மரணங்களை விபத்து எனக் கூறுவதற்கு சாத்தியமே இல்லை; நீந்தத் தெரியாத யாரும் அந்தக் குளத்தில் எங்கிருந்தும் எப்படியும் நடந்தே போய்விடமுடியும். 

* சடலங்கள் சிதைந்தநிலையில் காணப்படும் வழக்குகளில் மரணப் புலன்விசாரணையும் சடலக்கூறாய்வும் இறந்துபோனவர்களின் ரத்த உறவினர்கள், 2 மூத்தவர்கள் முன்னிலையில் நிர்வாக நடுவரால் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கில் சடலங்கள் உடனடியாக சவக்கிடங்குக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன; அடுத்த நாள்தான் சடலக்கூறாய்வும் மரணப் புலன்விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. 

* யாரும் மரணப் புலன்விசாரணையிலும் சடலக்கூறாய்விலும் உடனிருக்க அனுமதிக்கப்படவில்லை. 

* சடலங்கள் கண்டறியப்பட்டவுடனேயே ஆள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது; அதன் தொடர்ச்சியாக மறுநாள் பிற்பகல் 2 மணிக்கோ அல்லது அதன்பிறகோ 5 பேரின் பெயர்களையும் போலீஸ் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் ரத்த உறவினர்கள் யாரும் அங்கு இல்லாதநிலையில் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

* குட்டையிலிருந்து சடலங்கள் அகற்றப்பட்ட பிறகு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்தில், அங்கு மண்ணில் ரத்தம் சிந்தியிருந்துள்ளது. 

* உண்மையறியும் குழுவினரிடம் பேசிய செர்லோபள்ளி கிராமத்தினர், “16 ம் தேதி இரவு 7.30 மணியளவில் குட்டைக்கு அருகில் ஒரு போலீஸ் வாகனம் சென்றது. அதையடுத்து வனத்துறைக்குச் சொந்தமான ஒரு ஜீப், இரவு 10.30 மணிக்குச் சென்றது” என்று கூறினர். 

* ஐந்து பேரின் மரணங்களும் விபத்தோ தற்கொலையோ இல்லை; இவை மனிதக் கொலைகள்தாம் என்பது உறுதியாகிறது. 

* இந்த நிலையில், இந்த மரணங்களில் தொடர்புடைய வனத்துறை, போலீஸ் துறை அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், கடத்தல்காரர்களுக்கு எதிராக, பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என இந்தக் குழு வலியுறுத்துகிறது.  

* இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும். 

* தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்களின் முன்னிலையில் மறு சடலக்கூறாய்வு நடத்தப்படவேண்டும் என்று உண்மையறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்