`அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்களை வெளியேற்றுங்கள்!’ - மாணவிகள் போராட்டத்தால் அதிர்ந்த திருமங்கலம் அரசுக் கலைக்கல்லூரி

தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி திருமங்கலம் அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

மதுரை திருமங்கலம்

அண்மைக்காலமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. 13 வயது சிறுமியைப் பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொல்ல முயன்றது, 10 வயது மகளைத் தந்தையே கொலை செய்தது, தனியார் பள்ளி மாணவிகள் 5 பேர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்பன போன்ற சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தநிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி 200-க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

திருமங்கலம் அருகே கப்பலூரில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக  மாணவிகள் பயிலும் வகுப்பறை கண்ணாடி ஜன்னல்களை, வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போதே சிலர் உடைத்ததாகக் கூறப்படுகிறது. உடைந்த கண்ணாடித் துகள்கள்களால் மாணவிகள் சிலர் காயமடைந்ததை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர். இந்த நாச வேலையைச் சில மாணவர்களே செய்து வருவது தெரிந்தும், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 21 ஜன்னல் கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடர்பாக எந்த மாணவர் மீதும் நடவடிக்கை இல்லை. 

இந்த அராஜகத்தை இனியும் பொறுக்க முடியாது என்று கூறி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அராஜகத்தை செய்து வரும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் 2 பேரை டி.சி கொடுத்து கல்லூரியைவிட்டு நிர்வாகம் வெளியேற்றியது. அதன்பின்னரே, சுமார் 6 மணி நேரத்துக்கும் மே நடந்த போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.
                 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!