``என் மகள் துணிச்சல்மிக்கவர்!'' - அமெரிக்க ஆசிரியை சாந்தியின் தந்தை பேட்டி | My daughter is courageous woman, says teacher Shanthi's father

வெளியிடப்பட்ட நேரம்: 07:28 (24/02/2018)

கடைசி தொடர்பு:07:28 (24/02/2018)

``என் மகள் துணிச்சல்மிக்கவர்!'' - அமெரிக்க ஆசிரியை சாந்தியின் தந்தை பேட்டி

சில நாள்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவையே அதிரவைத்த அந்தச் சம்பவம் நடந்தது. ஃபுளோரிடா மாகாணத்தில் `பார்க்லேண்ட்' என்ற இடத்தில் உள்ள மேர்ஜோரி ஸ்டோன்மேன்  டக்ளஸ் என்ற பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 17 மாணவர்கள் பலியானார்கள். அவர்களைக் காப்பாற்ற முயன்ற ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிகோலஸ் க்ரஸ் என்கிற இளைஞரிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி என்கிற ஆசிரியை. பள்ளி வளாகத்துக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதுமே, `ஏதோ... தவறு நடக்கிறது' என்பதைப் புரிந்துகொண்ட சாந்தி, உடனடியாக வகுப்பறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடியதோடு, அதன்மேல் வெள்ளைத்தாளைப் போட்டு மறைத்தார். இதனால் நிகோலஸின் கண்களுக்கு, வகுப்பில் இருந்த குழந்தைகள் தெரியவில்லை. 

ஆரிசியை சாந்தி பெற்றோர்

பள்ளியில் களேபரம் நடந்துகொண்டிருக்கையில், இந்த வகுப்பறை மட்டும் உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்த `swat' எனப்படும் அமெரிக்க அதிரடிப்படை போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது. ``உள்ளே யார்? கதவைத் திறங்கள். நாங்கள் போலீஸ் வந்திருக்கிறோம்'' என்று கதவை தடதடவெனத் தட்டினார்கள். உள்புறத்தில் இருந்த ஆசிரியை சாந்திக்கோ, `கொலைகாரர்கள்தான் போலீஸ்போல பேசுகிறார்கள்' எனக் கருதினார். ``என்னால் கதவைத் திறக்க முடியாது. முடிந்தால் உடைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று அவர் போலீஸாருக்கு பதிலளித்தார். போலீஸார்  சத்தம் போட்டும் ஆர்ப்பாட்டம் செய்தும் கதவைத் திறக்க மறுத்துவிட்டார் சாந்தி. 

ஒருவழியாக,  வகுப்பின் ஜன்னலை உடைத்துதான் போலீஸார் உள்ளே சென்றனர். உள்ளே கண்ட காட்சி போலீஸாரை நெகிழவைத்தது. வகுப்பறையின் ஒரு மூலையில் குழந்தைகளை அமரவைத்து `அடைகாக்கும் கோழி' போல பாதுகாத்துக்கொண்டு இருந்துள்ளார் ஆசிரியை சாந்தி. அதைப் பார்த்தவுடன்தான் போலீஸாருக்குச் சற்று நிம்மதிவந்தது. பிறகு, அவரையும் குழந்தைகளையும் வகுப்பறையிலிருந்து வெளியேற்றி, பத்திரமான இடத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். சாந்தியைப் பாராட்டி அமெரிக்க மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன. 

சமயோசிதமாகச் செயல்பட்ட ஆசிரியை சாந்தி, திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். தந்தை ஆர்.வி.சேகர், தாயார் ராதா. வருவாய்த் துறையில் பணியாற்றிய சேகர், ஆந்திர மாநிலத்தில் சிலகாலம் பணியாற்றிய பிறகு, மும்பையில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடியேறினார். சாந்தி மும்பையில்தான் பிறந்துள்ளார். 

ஆசிரியை சாந்தி

திருமணத்துக்குப் பிறகு கணவர் விஸ்வநாதனுடன் ஃபுளோரிடாவில் குடியேறினார் சாந்தி. விஸ்வநாதன், தஞ்சாவூர் அருகே உள்ள மாயவரத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள். அமெரிக்காவில் கல்லூரியில் படித்துவருகிறார்கள். 25 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட சாந்தி, 2008-ம் ஆண்டுதான் டக்ளஸ் பள்ளியில் கணக்குப் பாட ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறார். டக்ளஸ் பள்ளி சக ஊழியர்கள் அனைவரும், கணவர் பெயரின் தொடக்க எழுத்தைக் குறிப்பிடும் வகையில் இவரை `Mrs.V ' என்றே செல்லமாக அழைப்பார்கள். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சீனியர் சிட்டிசன் குடியிருப்பில், ஆசிரியை சாந்தியின் பெற்றோர் வசித்துவருகின்றனர். சாந்தி குறித்து தந்தை ஆர்.வி.சேகர் கூறுகையில், ``என் மகள் இயல்பாகவே துணிச்சல்மிக்கவர். அவரின் செயலால் குழந்தைகளின் உயிர் பாதுகாக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி. ஆண்டுக்கு ஒருமுறை கோவை வந்து எங்களுடன் ஒரு மாதம் தங்கிவிட்டுச் செல்வார் '' என்றார். 

சாந்தியின் துணிச்சல்மிக்கச் செயலை, அமெரிக்கவாழ் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களும் பாராட்டியுள்ளன. `துப்பாக்கிச் சூட்டிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர் சாந்தியின் தோழிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்