பெண் கொலைவழக்கில் 3 இளைஞர்களுக்கு ஆயுள்தண்டனை! - திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு | Three sentenced life over murder of Tiruvallur Lady

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/02/2018)

கடைசி தொடர்பு:23:00 (23/02/2018)

பெண் கொலைவழக்கில் 3 இளைஞர்களுக்கு ஆயுள்தண்டனை! - திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணைக் கொலை செய்த வழக்கில் 3 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகளீர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவர் 

திருவள்ளூர் மாவட்டம் மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர், கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, மாத்தூர் செல்வதற்காக வியாசர்பாடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் ஆட்டோவில் ஏறியிருக்கிறார். ஆனால், வெங்கடேசன் மாத்தூருக்குச் செல்லாமல், ரெட் ஹில்ஸ் பகுதிக்கு ஆட்டோவைச் ஓட்டிச் சென்றார். அவரது நண்பர்கள் சுதாகர், பார்த்திபன் ஆகியோரும், பயணத்தின் போது ஆட்டோவில் ஏறிக்கொண்டனர். வடபெரும்பாக்கம் என்ற இடத்தில் மல்லிகாவைக் கொலை செய்த அந்த மூவரும், அவர் அணிந்திருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போன், கொலுசு உள்ளிட்டவைகளைக் கொள்ளையடித்தனர்.

மல்லிகா காணமல்போனது குறித்து அவரது கணவர் சதாசிவம் போலீஸில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து ரெட் ஹில்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேசன் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து நகைக்காக மல்லிகாவைக் கொலை செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து  வெங்கடேசன், சுதாகர், பார்த்திபன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று (23.2.2018) மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி பரணிதரன், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலஷ்மி ஆஜராகி வாதாடினார்.