வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (23/02/2018)

கடைசி தொடர்பு:23:30 (23/02/2018)

திருப்பூரில் மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு! - போலீஸார் விசாரணை

திருப்பூரில் பணியின்போது மின்சாரம் தாக்கியதில் திருப்பூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. 34 வயது நிரம்பிய கட்டிடத் தொழிலாளியான இவர், ரோஜா நகர் என்ற பகுதியில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டில் கடந்த சில நாள்களாக கட்டட வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல அங்கு கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்த ரங்கசாமி, எதேச்சையாக அங்கிருந்த இரும்புக் கம்பியை பிடித்துள்ளார். அப்போது அந்த இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்ததால், கட்டிடத்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து, ரங்கசாமியை உடனடியாக மீட்ட சக தொழிலாளிகள், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ரங்கசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதி காரியங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கட்டிட தொழிலாளி ரங்கசாமியின் மரணம் குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்மீது வழக்குப் பதிவு செய்த திருப்பூர் போலீஸார், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.