`ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் அல்ல; இனி ஒழிப்பு போராட்டம்தான்' - தூத்துக்குடியில் கொதித்த இயக்குனர் கெளதமன்

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இனி போராட்டம் நடத்தப்போவதில்லை. தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை ஒழித்துகட்டும் தொடர் போரட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.” என  இயக்குனர் கெளதமன் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பேசிய இயக்குநர் கௌதமன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருந்து அங்குள்ள மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களிலும் கால் ஊன்ற முடியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்போடு தூத்துக்குடியில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமின்றி, இந்த ஆலையைச் சுற்றி உள்ள மக்கள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பலவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வருடத்தில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் 150-க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், விரிவாக்கப் பணி என்ற பெயரில் தனது 2-வது ஆலையை நிறுவுவதற்கான பணிகளை வேகமாக எடுத்து வருகிறது ஆலை நிர்வாகம்.

ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் அண்மையில் போராடிய மக்களில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது, சிறை என்ற பயத்தைக் காட்டி ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களை அடக்கி வைத்துவிடலாம் என நினைத்துவிட்டார்கள். இதைத் தொடங்கும் போது ஆதரவாக நின்றவர்கள், ஆலோசனை கொடுத்தவர்கள் ஜாதி அடிப்படையில் இப்பகுதி மக்களிடையே ஏற்படுத்திய பிரச்சினையால்தான் இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமை இல்லாமல் போகிறது. இது ஆலை தரப்பிற்கு சாதகமாக போவிட்டது.

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்தப் போவதில்லை. ஸ்டெர்லைட் ஆலை ஒழிப்புக்கான தொடர் போரட்டத்தில் நாங்களும் ஈடுபடவுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையால் ஆதாயம் அடையாத கட்சிகள் இல்லை. ஆதாயம் அடைந்த கட்சிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக  நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் என்பது ஆக்கப்பூர்வமான கூட்டம் அல்ல. காவிரி தண்ணீர் பாய்ந்து நெல்லை அறுவடை செய்யலாம் என்பது எல்லாமே ஒரு கற்பனையில்தான் நடக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்போம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தருகிறோம் எனச் சொன்ன 177 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தரும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் உறுதியும் இல்லை“ என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!