வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (24/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (12/07/2018)

"காவிரியில் தண்ணி வரலை..அதனால்,மதுபானம் தயாரித்தோம்!"- போலீஸாரை அதிர வைத்த கும்பல்

 

 

"காவிரியில் தண்ணி வரலை. அதனால்,வேலை,வெட்டி இல்லாம நாங்க நடத்துன ஹோட்டலுக்கு யாரும் சாப்பிட வரலை. வருமானத்துக்காக வேற வழியில்லாம போலி மதுபானம் தயாரித்தோம். கர்நாடகம் தண்ணி தராததுதான் நாங்க மதுபானம் தயாரிக்க காரணம்" என்று போலி மது மதுபானம் தயாரித்த கும்பல் கூலாக சொல்ல,போலீஸார் அதிர்ந்து போனார்கள்.

 கரூர் மாவட்டம்,மண்மங்கலம் தாலூகவில் இருக்கிறது மூலிமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தங்கவேல் இப்பகுதியில் வீட்டுமுறையில் மண்பானை சமையல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்த பகுதிக்கு அருகில்தான் காவிரி ஓடுகிறது. இவரது வியாபாரம் விவசாயிகள் மற்றும் கூலி ஆட்களை நம்பி இருந்தது. காவிரியில் தண்ணீர் வராததால்,வேலை எதுவும் இல்லாமல் போக,ஹோட்டலுக்கு வரும் கூட்டம் குறைந்திருக்கிறது. இந்நிலையில்,வருமானம் இன்றி தவித்த தங்கவேலுவுக்கு,கேரளாவைச் சேர்ந்த ராஜு என்பவர்,'போலி மதுபானம் தயார்த்து வருமானம் பார்க்கலாம்' என்று சொல்ல,தங்கவேலும் தலையாட்டி இருக்கிறார். இவர்களுடன் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் கூட்டு சேர்ந்திருக்கிறார்.

 அதை தொடர்ந்து,கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஸ்பிரிட்டில் தங்கவேல் தோட்டத்தில் வைத்து போலி மதுபானம் தயார்த்திருக்கிறார்கள். அவற்றை கேரளா மற்றும் நம் மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தார்கள். இந்நிலையில்,மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நடத்திய ஆய்வில் பிடிப்பட்ட கார் ஒன்றில் இவர்கள் கேரளாவுக்கு போலி மதுபானம் கடத்திச் சென்றது அம்பலமானது. உடனே,களத்தில் இரங்கிய வேலாயுதம்பாளையம் போலீஸார்,மூலிமங்கலத்தில் ரெய்டு நடத்தியதில்,தங்கவேலும்,முருகேசனும் பிடிப்பட்டனர். அதோடு,அங்கே இருந்த 35 லிட்டர் காலி கேன்கள் 18,காலி குவாட்டர் பாட்டில்கள் 100,காலி புல் பிளாஸ்டிக் பாட்டில்கள் 300,மது நிறுவனங்களின் பெயர் ஸ்டிக்கர் 200,பாட்டில் மூடி மீது ஒட்டப்படும் டாஸ்மாக் ஹாலோகிராம் 1350,கலர் எசன்ஸ் பாட்டில் 1,பாட்டில் மூடி பொருத்தும் கருவி 1 ஆகியவற்றை கைப்பற்றினர். அதோடு,மதுபானம் கடத்த பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ கார் 1,பைக் 1,பத்தாயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் சீஸ் செய்தனர்.

 போலீஸார் விசாரிக்கையில்தான்,"காவிரியில் தண்ணி வரலை...அதனால்,வருமானத்துக்காக போலி மதுபானம் தயாரித்தோம். காவிரியில் தண்ணி தராத கர்நாடகம்தான் நாங்க மதுபானம் தயாரித்ததற்கு காரணம்ம்" என்று கூலாக சொல்ல,போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.