”தற்கொலை செய்து கொள்வேன்!”- மோடியை எச்சரிக்கும் புதுச்சேரி பெண்

”பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என ஆசிரமரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி

ஆரோவில் பொன் விழா ஆண்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி புதுச்சேரி வருகை தர இருக்கிறார். இந்நிலையில் மோடி ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றால் தற்கொலை செய்யப்போவதாக ஒரு பெண் அறிவித்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பொகாராவைச் சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரும் அன்னையின் தீவிர பக்தர்கள். 1970-ல் புதுச்சேரி வந்த அவர்கள் தங்களது மகள்களான ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் நிவேதிதா என 5 பேரையும் ஆசிரம பள்ளியில் சேர்த்தனர். பிறகு அதில் யாருமே திருமணம் செய்துகொள்ளாமல் ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்து வந்தனர். இந்நிலையில் ஆசிரம நிர்வாகிகள் சிலர் மீது இந்த சகோதரிகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.

அரவிந்தர் ஆசிரமம்

அதையடுத்து ஆசிரமத்தின் விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த 2014 டிசம்பர் மாதம் வலுக்கட்டாயமாக குடும்பத்துடன் ஆசிரம நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டனர். அதனால் விரக்தியடைந்த 4 சகோதரிகளும், தங்கள் பெற்றோருடன் கடந்த 18.12.2014  அன்று  தேதி காலாப்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் அவர்களது தாய் சாந்தி ஆகியோர்  உயிரிழந்தனர். அதே சமயம் நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ மற்றும் அவர்களது தந்தை  உயிருடன் மீட்கப்பட்டு  புதுச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தற்போது  வசித்து வருகின்றனர். தாய் மற்றும் தங்களது இரண்டு சகோதிரிகள் இறப்புக்குக் காரணமான அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பெயரில் காவல்துறை  இதுவரை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும்,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தங்கும் இடம், உணவு உள்ளிட்டவைகளை தர ஆசிரம நிர்வாகம்  இதுவரை வழங்காததைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி  புதுச்சேரி வரும் பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த அன்னை ஆசிரமத்தைப் பார்வையிட இருப்பதற்கு அந்த சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”பாலியில் தொல்லை உட்பட பல்வேறு புகார்கள் ஆசிரம நிர்வாகிகள்மீது இருக்கும் நிலையில் பிரதமர் அங்கு வந்து பார்வையிட்டால் அவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே பிரதமர் ஆசிரமம் வரக்கூடாது. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். இதையும் மீறி பிரதமர் ஆசிரமத்தைப் பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று சகோதரிகளில் ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!