வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (24/02/2018)

கடைசி தொடர்பு:07:30 (24/02/2018)

ஒ.என்.ஜி.சி-யை ஆதரிப்பதா?- சி.பி.எம். கே.பாலகிருஷ்ணனுக்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

மீத்தேன், ஹைட்ரோ கார்ப்ன் திட்டங்களை எதிர்ப்பதாகவும் ஆனால் ஒ.என்.ஜி.சி-யை எதிர்த்து போராடுவது முறையல்ல என தெரிவித்துள்ள சி.பி.எம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

''‘காவிரி டெல்டா கிராமங்களில் ஒ.என்.ஜி.சி. நிறுவனம், கச்சா எண்ணெய்- இயற்கை எரிவாயு எடுப்பதால் இங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய்-எரிவாயு கசிவினால் விவசாய நிலங்கள் பாழாகி வருவது எல்லோருக்கும் தெரிந்த வெட்ட வெளிச்சமான உண்மை. எரிவாயு கசிவினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற ஆபத்துகளால் தான் கதிராமங்கலம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் ஒ.என்.ஜி.சி-க்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை வெளியேற்றினால்தான் எதிர்காலத்தில் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க முடியும். இதனால்தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சி.பி.எம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒ,என்.ஜி.சி-க்கு ஆதரவாக பேசுகிறார். அதேசமயம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழரா ? இவரது பேச்சு வருத்தமளி க்கிறது. ஒ.என்.ஜி.சி நிறுவனம் தனது வழக்கமான பணிகளோடு, நீரியல் விரிசல் போன்ற ஆபத்தான தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடிய ஷேல் கேஸ் எடுக்கும் முயற்சிகளிலும் இறங்கி வருகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன” என மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.