வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (24/02/2018)

கடைசி தொடர்பு:11:23 (24/02/2018)

ஜெயலலிதாவுக்கு திடீர் சிலை! - இரவோடு இரவாக அகற்றிய அதிகாரிகள்

திருவள்ளூர் பகுதியில் அனுமதியின்றி வைத்த ஜெயலலிதா சிலையை அதிகாரிகள் இரவோடு இரவாக அகற்றினர். 

ஜெயலலிதா சிலை

திருவள்ளூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் என்பவர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று அவரின் உருவச் சிலையைத் திறக்க முடிவு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். அனுமதி இல்லாமல் சிலை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் வந்துவிடக் கூடாது என்று  திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ஓ திவ்யஶ்ரீ ஆகியோர் தலைமையில் நேற்று இரவு 10 மணியளவில் ஜெயலலிதா சிலையை அகற்றினர்.

ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வருவாய் ஊழியர்கள் சிலையைப் பெயர்த்தெடுத்து தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். `அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் சிலையைக்கூட வைக்க முடியவில்லையே' என்று ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பித் தள்ளினார்கள்.