மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர் கே.ஜே.மேத்யூ.

பள்ளி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த எருமாடு என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1922-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது 214 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார். அதில் 90 சதவவிகித மாணவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றேகால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, தனியார் பள்ளிக்கு இணையான கட்டடங்களுடன் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில், வகுப்பறைக்குப் பின்புறம் உள்ள காலி இடங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் ஆசிரியர் கே.ஜே.மேத்யூ. பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து ஆசிரியர் கே.ஜே.மேத்யூ கூறுகையில், “சிறுவயது முதல் விவசாயத்தில் அனுபவமும் ஆர்வமும் ஈடுபாடும் அதிகம்.

விவசாயத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என நினைத்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருத்துகள் உட்பட பல்வேறு வகையான நச்சுக்களை மண்ணிலும் பயிர்கள் மீதும் பயன்படுத்துவது வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே, அடுத்த தலைமுறையினருக்கு விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வேறூன்றத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகப் பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்து மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்.

கே.ஜே. மேத்யூ

இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள்  சத்துணவுக்காக மட்டும்தான் பள்ளிக்கு வந்தனர். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியால் மாணவர்கள் பள்ளிக்குத் தவறாமல் வருகின்றனர்.

அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுகூட மற்றொரு காரணமாக இருந்தாலும், புத்தகம், பாடம் மட்டுமல்லாது இயற்கை முறை விவசாயத்தின்மீது ஏற்பட்டுள்ள ஈடுபாடு, ஈர்ப்பின் காரணமாகக்கூட பள்ளிக்கு வருவதை அவர்கள் தவிர்ப்பதில்லை. பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் புரகோலின், காலிஃபிளவர், கத்திரிக்காய், மிளகாய், கோஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் பல்வேறு வகையான கீரை வகைகளும் விளைவிக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் இவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. மாணவர்களும் தங்கள் வீடுகளில் இயற்கை முறை விவசாயத்தைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இதை என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். சில மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பூசணி விதை உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் வைத்து பராமரிக்கவும் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, இதனால் பள்ளி வளாகத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்வகைகளைப் பராமரித்துவிட்டு வீடு திரும்ப மாலை 6.30 மணியாகிறது” என்றார் முகத்தில் புன்னைகை மலர.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரான ஏ.பி.யாகோப் கூறுகையில், “நான் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பள்ளியின் தலைமை ஆசியராகப் பணியாற்றி வருகிறேன். மேத்யூ 2006-ம் ஆண்டு முதல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயம் செய்து, மாணவர்களைக் கவர்ந்து வருகிறார். அது ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், பள்ளிக்கான ஸ்டேய்ஜ், பெயின்ட்டிங் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை, நான் மற்றும் இங்கு பணியாற்றி வரும் 9 ஆசிரியர்களின் சொந்த செலவில்தான் செய்துள்ளோம். பள்ளி கட்டடங்கள் முறையாகப் பராமரித்து 10 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, பள்ளியின் கட்டடங்களை முறையாகப் பராமரித்து செப்பணிட அரசு உதவி செய்ய வேண்டும். இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என 3 வகை கல்வி வழங்கப்படுகிறது. கட்டடங்கள் முறையாகப் பராமரிக்கப்படும் பட்சத்தில், மேலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!