வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (24/02/2018)

கடைசி தொடர்பு:20:05 (24/02/2018)

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவு! - இந்திய பக்தர்கள் வீடு திரும்பினர்

கச்சத்தீவு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிறைவடைந்தது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின்போது இருநாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் இலங்கையிலிருந்து 6,000-க்கும் மேற்பட்டவர்களும் பங்கேற்றனர்.

கச்சத்தீவு

நேற்று மாலை கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை மற்றும் அந்தோணியார் சுருவ பவனியும் நடந்தது.

இன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. யாழ் மறை மாவட்ட அதிபர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தமிழிலும், காலி மறை மாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும் திருப்பலி செய்தனர். அதைத் தொடர்ந்து நற்கருணை ஆசிரும் தேர் பவனியும் நடந்தது.

நேற்று (23.2.2018) நடந்த தேர்பவனியின்போது இலங்கைக் கடற்படை வீரர்கள் அந்தோணியார் சுருவத்தைச் சுமந்து வந்தனர். இன்று நடந்த பவனியின்போது இரு நாட்டு பக்தர்களும் அந்தோணியார் சுருவத்தைத் தூக்கி வந்தனர். இன்று நடந்த திருப்பலியில் இலங்கை கடற்படை தளபதி ரவீந்திர் விஜய குணரத்னே, வடக்கு கடற்படை தளபதி ஜெயந்த் டி சில்வா, இலங்கை ராஜாங்க அமைச்சர் விஜய கலா மகேஸ்வரி, இந்திய துணை தூதர் நடராஜன் மற்றும் இந்திய இலங்கை பங்கு தந்தையர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு திருவிழாவில், மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதால் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இதனால் இந்த ஆண்டு இந்திய பக்தர்கள் அதிகளவில் பங்கேற்க நினைத்து இருந்தனர். அரசு கட்டுப்பாட்டால் 2,000 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால், இலங்கையிலிருந்து அதிகமான தமிழர்களுடன் சிங்களர்களும் பங்கேற்றனர்.

திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்திய பக்தர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்.