வினோபாபாவேவிடம் பணியாற்றிய தமிழக எம்.பி.க்கு வயசு 100!

   எம்.பி எஸ்.கே.பரமசிவன்

ஈரோடு தொதியின் முன்னாள் எம்.பி யான் எஸ்.கே.பரமசிவன் 100 வயதைக் கடந்து தன்னுடைய பிறந்தநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்கா சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.பரமசிவம். இவர், குமாரசாமிக் கவுண்டர் - குப்பாயம்மாள் தம்பதியருக்கு 10-வது குழந்தையாகப் பிறந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், ஈரோட்டை அடுத்த முத்துக்கவுண்டன்பாளையத்தில் பஞ்சாயத்துத் தலைவராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார். 1962 முதல் 1967 வரை ஈரோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கோவை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர், சின்னியம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு வங்கியில் தலைவராக 35 ஆண்டுகள், ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் சேர்மனாக 4 ஆண்டுகள் என இவர் வகித்த பதவிகள் ஏராளம்.

பரமசிவன்

பெருநிலக்கிழார்களிடமிருந்து நிலத்தைத் தானமாகப் பெற்று நிலமில்லாத ஏழை எளியவர்களுக்கு வழங்கும் பூமிதான இயக்கத்தைத் தொடங்கிய வினோபாவே தமிழ்நாட்டுக்கு வந்தபோது, பலரும் தங்களுடைய நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். ஆனால், அவற்றில் பெரும்பாலும் விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலமாகத்தான் இருந்தது. ஆனால், எஸ்.கே.பரமசிவனோ காளிங்கராயன் பாசனத்துக்குட்பட்ட தன்னுடைய செழிப்பான பல ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார். அதேபோல, இந்தியா - சீனா போரின்போது நம் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தடுமாறிய நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.கே.பரமசிவன் தனது மனைவியின் கையில் இருந்த 7 பவுன் தங்க வளையல்களைக் கழட்டி நேருவிடம் யுத்த நிதியாகக் கொடுத்தார். 

 

எஸ்.கே.பரமசிவன்

 

இதனையடுத்து, 1964-ல் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி கூட்டுறவு பால் பண்ணைத் தொழிலை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என “தேசிய பால்வள அபிவிருத்தி வாரியம் (NDDB)" அமைக்கப்பட்டது. அதற்கு டாக்டர் குரியன், தலைமைப் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டில் இதற்கு தகுதியான தலைமை தேவைப்பட்டது. முன்னாள் நாடாமன்ற உறுப்பினரான எஸ்.கே.பரமசிவன்தான்  இதற்குச் சரியாக இருப்பார் என டாக்டர் குரியனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையும் எஸ்.கே.பரமசிவனையே சேரும்.  

இவரது சீரிய முயற்சியால்தான் ஈரோட்டில் தற்போது 55 ஏக்கரில் ஆவின் பால் பண்ணையும், 10 ஏக்கரில் தேசிய பால்வள அபிவிருத்தி வாரிய பயிற்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஈரோடு சென்னிமலை சாலையில் 10 ஏக்கரில் கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைத்து ஆவின் கால்நடை கலப்புத் தீவனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தாராபுரம் அருகில் 10 ஏக்கரிலும், சத்தியமங்கலத்தில் 8 ஏக்கரிலும் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து பால்வளத் துறையில் இவர்  ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். மேலும், ஈரோட்டைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த இவரை, ‘பால்வளத் தந்தை’ என்றே பகுதிமக்கள் அழைக்கின்றனர்.

‘தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகிய யாரையுமே அரசியலுக்கு அழைத்து வராதவர். சுயநலம் பாராது பொது எண்ணத்தோடு எளிமையாக வாழ்ந்து வருபவர். சித்தோட்டில் ஒன்றியச் சேர்மனாக இருந்த இவருக்கு, ஓர் அலுவலக அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘என்னுடைய கழிப்பறையை நான்தான் சுத்தம் செய்வேன்’ என அவருடைய பதவிக்காலம் முடியும்வரை அவரேதான் அந்தக் கழிப்பறையைச் சுத்தம் செய்திருக்கிறார். இப்படி எளிமையாக வாழ்ந்துவருபவர் தன்னுடைய 100 வயதைக் கடந்தும் மிகவும் உற்சாகமாகச் செயல்பட்டு வருகிறார்.

இவரது பிறந்தநாளை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விவசாயச் சங்கங்கள் போட்டிபோட்டு ஈரோட்டில் கொண்டாடி வருகின்றன. இன்று (24-ம் தேதி) காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.பரமசிவன் அவர்களுடைய 100-வது பிறந்தநாள் விழா தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கொண்டாடப்பட இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!