வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (24/02/2018)

கடைசி தொடர்பு:20:13 (24/02/2018)

`காவிரி விவகாரம்’ - மானியவிலை ஸ்கூட்டர் திட்ட தொடக்கவிழாவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் வைத்த கோரிக்கை! #LiveUpdates

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, தமிழக அரசின் மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தைப் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கிவைத்தார்

*தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசிய பிரதமர் மோடி, `மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்தபோது 13வது நிதிக்குழு மூலம் தமிழகத்துக்கு 81,000 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழகத்துக்கு ரூ.1,80,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார். 

*ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ’பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 1.80 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார். மேலும், ’நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தில் 3.5 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

* பெண்கள் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, `பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு உதவி செய்யும்போது, அந்த முழு குடும்பமும் பயன் பெறுகிறது’ என்றார். 

 

* இதையடுத்து விழாப் பேருரை ஆற்றிய பிரதமர் மோடி, `தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்’ என்று கூறி தமிழில் உரையைத் தொடங்கினார். மேலும், சுப்பிரமணிய பாரதி என்ற மாபெரும் கவிஞர் பிறந்த மண்ணில் நிற்பதற்கு பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``மாணவ மாணவியருக்கு 14 வகையான கல்வி உபபொருள்கள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், கட்டணமில்லாப் பேருந்து வசதி என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற உன்னதநிலையைத் தமிழ்நாடு அடைந்தது. ஊரகப் பகுதிகளிலுல் 65 கல்லூரிகளை அமைத்து ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கியவர் ஜெயலலிதா. இதன்விளைவாகத் தமிழ்நாடு, நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் 46.9 சதவிகிதம் என்ற அளவுடன் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தேசிய சராசரியான  25.2 சதவிகிதத்தைவிட இது 2 மடங்கு கூடுதலாகும். 

இந்தியாவை மாபெரும் வல்லரசாக்கும் திட்டங்களை வகுத்து விரைந்து செயலாற்றிக்கொண்டிருக்கிற பிரதமர் மோடியும், மகளிரின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டு, பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை இந்தியாவே பாராட்டுகிறது. 
பிரதமர் மோடியிடம் ஒரு சிறு கோரிக்கையைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வைக்க விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board), காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (Cauvery water regulation committee) ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்’' என்றார்.

*அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசின் மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கிவைக்க சென்னை வந்ததற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 

* நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகப் பேசினார்.
 

குஜராத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத் தளத்துக்கு வந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க எம்.பி-க்கள் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

கடற்படை தளத்திலிருந்து விழா நடைபெறும் கலைவாணர் அரங்குக்கு சாலைமார்க்கமாக வந்த பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைவாணர் அரங்குக்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தாமதமாக வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை கலைவாணர் அரங்கத்திற்குள் அனுமதிக்க போலீஸார் முதலில் மறுத்தனர். இதனால் போலீஸாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிதுநேரத்துக்குப் பின்னர் அவர் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.