`நிரவ் மோடிக்கு அடுத்த செக்!’ - ரூ.523 கோடி சொத்துக்கள் முடக்கம்! | rs 523 cr in nirav modi assets has seized

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (24/02/2018)

`நிரவ் மோடிக்கு அடுத்த செக்!’ - ரூ.523 கோடி சொத்துக்கள் முடக்கம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நிரவ் மோடியின், ரூ.523 கோடி மதிப்பிலான 21 சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

நிரவ் மோடி

முப்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததாக சி.பி.ஐயிடம் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. நிரவ் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. அவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றனர். விசாரணையில், நிரவ் மோடிக்குச் சொந்தமான விலை உயர்ந்த 9 சொகுசுக் கார்கள், பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடக்கியுள்ளார்கள்.

நிரவ் மோடி, மீதான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு சொந்தமான, 81.16 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 அடுக்குமாடி வீடுகள், மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள 15.45 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர சொகுசு அடுக்குமாடி வீடு, உள்ளிட்ட 21 சொத்துக்களை அமலாக்கத் துறையினர் ஒரே நாளில் முடக்கியுள்ளனர். இதுவரை, நிரவ் மோடிக்குச் சொந்தமான ரூ. 6,393 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், நிரவ் மோடி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டுள்ளன.