மிஸ்டர் வேலுமணி... சிலைல கண்ணை சரி பண்ணா போதுமா... ஜெயலலிதா எங்கே? | Criticism eruped on jayalalith's statue

வெளியிடப்பட்ட நேரம்: 00:31 (25/02/2018)

கடைசி தொடர்பு:09:46 (25/02/2018)

மிஸ்டர் வேலுமணி... சிலைல கண்ணை சரி பண்ணா போதுமா... ஜெயலலிதா எங்கே?

ஜெயா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று (24-02-18) 70-வது பிறந்தநாள். இதை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்தது அ.தி.மு.க தலைமை. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலையைத் திறக்கத்திட்டமிட்டனர். அதன்படி இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. அது 7 அடி உயரம் கொண்ட வெண்கலச்சிலையாகும். முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிலையைத் திறந்தனர். அ.தி.மு.க தொண்டர்களின் “அம்மா...அம்மா” கோஷத்திற்கு மத்தியில் சிலைத்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில், சிலையின் முக அமைப்பு ஜெயலலிதா போல் இல்லையென்று விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. இந்தச் சிலை உருவானதன் பின்னணி பற்றி அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த பின்னணி:
 

ஜெயா கோவையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது வ.உ.சி மைதானத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலை ஒன்று திறக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த முயற்சியை எடுத்தார். அந்தச் சிலை முதல்வர் பழனிசாமியைக் கவர்ந்தது. அதேபோன்ற சிலையை தலைமைக் கழகத்திலும் திறக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதை அவர் எஸ்.பி.வேலுமணியிடம் கூறினார். 

ஜெயாஅமைச்சர் வேலுமணி சிலைத் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது ஏற்பாட்டின்பேரில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சிற்பியிடம் சிலைத்தயாரிப்புப் பொறுப்பு ஒப்படைக்கப்பபட்டது. சிலை தயாரானபோது அதன் கண்ணில் வித்தியாசம் தெரிவதாகத் தோன்றவே அது சரிசெய்யப்பட்டது. சிலைத் தயாரிப்புக்கான பெருமளவுத் தொகையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே ஏற்றுக் கொண்டுள்ளார். 

எடப்பாடி


இந்நிலையில், ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. அ.தி.மு.க தொண்டர்களிடம்கூட அதுபற்றிய அதிருப்தி காணப்படுகிறது. “தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அருகே கம்பீரமாக நிற்க வேண்டிய தலைவியின் சிலையை மோசமாகத் தயாரித்து அவருக்கு அவமானத்தைத் தேடித்தந்திருப்பதாகக் குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அவர்களுடைய விமர்சனங்களை அமைச்சர் வேலுமணியை நோக்கியும் பாய்கின்றன. இங்கேயே எவ்வளவு நல்ல சிற்பிகள் இருக்கும்போது, ஆந்திராவிற்குப் போனது எதற்காக என்பது அவர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. வேண்டுமென்றே அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கொந்தளிப்பவர்களையும் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கவனித்தபடி பரிதாபமாக இருக்கிறது அந்த 'ஜெயலலிதா' சிலை!

loading...