வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:10:40 (25/02/2018)

“நானெல்லாம் 100 வருஷம் இருக்க மாட்டேன்!”- ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேச்சு

திருநாவுக்கரசர்

முன்னாள் ஈரோடு எம்.பி எஸ்.கே.பரமசிவனின் 100-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் சார்பில் இன்று ஈரோட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் வழி நெடுக கட்சிக் கொடி, திருநாவுக்கரசரை வாழ்த்தி எக்கச்சக்கமான பேனர்கள், எஸ்.கே.பரமசிவன் அவர்களின் 100 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கு முழுவதும் 100 வாழைக்கன்றுகளை கட்டியது என நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள்.ஜி.ராஜன்.

திருநாவுக்கரசர்

இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் பேசுகையில், “1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்  என்னை எம்.எல்.ஏ ஆக்கினார். அதன்பிறகு துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர் என கிட்டத்தட்ட 41 ஆண்டுகாலம் அரசியலில் இருந்துவருகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு 100 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வது என் வாழ்க்கையில் இதுதான் முதல்முறை. எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட முடியாது. கடவுளின் ஆசிர்வாதம் இருப்பவர்கள் மட்டும் தான் இந்த உலகத்தில் நூறு ஆண்டுகள் வாழமுடியும். நானெல்லாம் 100 வருஷம் இருக்க மாட்டேன். எனக்கு 68 வயசு ஆகுது. ஒரே இடத்துல கொஞ்ச நேரத்துக்கு மேல உட்கார முடியலை இடுப்பு வலிக்குது. ஆனால், பரமசிவன் ஐயா எப்படி ஜம்முன்னு உட்கார்ந்திருக்கார் பாருங்க... சொத்து பணம் இருந்தாலும் உயர்ந்த சொத்து உடல் நலம் தான். 

பரமசிவன் ஐயா பூமிதான இயக்கத்துக்காக தன்னோட நிலத்தை கொடுத்திருக்கார். அதேமாதிரி சீன போர் நெருக்கடியின் போது தன்னுடைய மனைவியின் கையிலுள்ள வளையளை கழட்டிக் கொடுத்திருக்கிறார். அன்றைக்கு உள்ள எம்.பிக்கள் எல்லாம் தங்களுடைய சொந்தக் காசை மக்களுக்காக செலவு செய்தார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சில எம்.பிக்கள் அரசாங்கம் கொடுக்கக் கூடிய பணத்தையே செலவு செய்ய மாட்டேங்குறாங்க. தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய அரசாங்கம் எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போகிறதோ அவ்வளவு நல்லது. மத்தியில் இருக்கக் கூடிய மோடி அரசாங்கமானது, எல்லாருடைய அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும் என்ற பெரும் பொய்யைச் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆயிரம் ரூபாய்க்கே ஓட்டு போடுகின்ற மக்கள் 15 லட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து விட்டனர். மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும், ராகுல் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. எஸ்.கே.பரமசிவன் ஐயா போன்றோர் ஆற்றிய தொண்டுகளால் தான் காங்கிரஸ் ஜீவனுள்ள கட்சியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் காமராஜர் ஆட்சி அமையும்” என்றார்.