வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (25/02/2018)

கடைசி தொடர்பு:17:26 (12/07/2018)

“பாட்டி கொஞ்சம் தண்ணி கொடு!”- மூதாட்டியிடம் நகை பறித்த பெண்கள்

 

 

அருக்காணி என்கிற 70 வயது பாட்டியிடம்,'குடிக்க தண்ணீர் கொடு பாட்டி' என்று கேட்டு வாங்கி குடித்துவிட்டு,பாட்டி அசந்த நேரத்தில் அவர் கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இரு பெண்கள் மாயமாக மறைந்துவிட்டனர்.

 கரூர் மேற்கு பிரதட்சன சாலையில் வசித்து வருகிறார் 70 வயது நிரம்பிய அருக்காணிப் பாட்டி. கிடைக்கும் கூலி வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறார். அதோடு,தனது கழுத்தில் பிள்ளைகள் போட்ட பன்னிரெண்டு பவுன் செயினை போட்டிருந்திருக்கிறார். வீட்டில் வேறும் இல்லை. அடுப்பில் தனியாக வேலையாக இருந்த அருக்காணிப் பாட்டியை நோட்டம் விட்ட இரண்டு பெண்கள்,அக்கம்பக்கத்தில் ஆள் அரவம் இல்லை என்பதை முடிவு செய்து கொண்டு அருக்காணி பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். உள்ளே வேலையாக இருந்த பாட்டியிடம் ரொம்ப உரிமையாக,'பாட்டி பேருந்து நிலையத்திற்கு பஸ் ஏற போறோம். வேகாத வெயில்ல நடந்து வந்ததால்,மயக்கமாகவும்,தாகமாகவும் இருக்கு. நா வறண்டு போச்சு. உனை பார்த்தா எங்க பாட்டி மாதிரியே இருக்க. குடிக்க ஒரு சொம்பு தண்ணி குடாத்தா' என்று கேட்க,'அதுக்கென்ன,ரெண்டு சொம்பு தண்ணியே தர்றேன்' என்றபடி,பாட்டி தண்ணீர் சொம்பை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். சொம்பை வாங்க முயல்வது போல் பாவ்லா காட்டிய இரு பெண்களும்,பாட்டி அசந்த நேரத்தில் அவர் கழுத்தில் கிடந்த 12 பவுன் செயினை அறுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தார்கள். பாட்டி குய்யோமுறையோ என சத்தம் போட,கூட்டம் கூடியது. கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுக்க,அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்,நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், "பட்டப்பகலில்,கரூர் நகரத்தின் முக்கிய பகுதியில் இதுபோல் பாட்டியிடம் 12 பவுன் செயினை இரு பெண்கள் அறுத்துக் கொண்டு ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கிராம பகுதிகளில்தான் இப்படி திருட்டு,வழிபறி,கொள்ளை சம்பவங்கள் நடக்கும். ஆனால்,இப்போது நகர பகுதிலேயே துணிச்சலாக வழிப்பறி சம்பவம் நடக்குதென்றால்,கரூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது" என்றார்கள் வருத்தமாக.